சங்கர் ஐ.ஏ.எஸ். அகாதெமி நிறுவனர் தற்கொலை

சென்னை மயிலாப்பூரில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாதெமி நிறுவனர் சங்கரன் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சங்கர் ஐ.ஏ.எஸ். அகாதெமி நிறுவனர் தற்கொலை

சென்னை மயிலாப்பூரில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாதெமி நிறுவனர் சங்கரன் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
 சென்னை, அண்ணா நகரில் சங்கர் ஐ.ஏ.எஸ்.அகாதெமி பயிற்சி மையத்தை நடத்தி வருபவர் சங்கரன் (45). இவரது சொந்த ஊர் திருச்செங்கோடு அருகே உள்ள நல்லகவுண்டம்பாளையம். மயிலாப்பூர் லஸ் பகுதியில் உள்ள கிருஷ்ணசாமி அவென்யூவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மனைவி வைஷ்ணவி. மகள்கள் சஹானா, சாது. சங்கரன் வியாழக்கிழமை வழக்கம் போல அண்ணா நகரில் உள்ள பயிற்சி மையத்துக்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். வீட்டில் அவருக்கும், அவரது மனைவி வைஷ்ணவிக்கும் இடையே குடும்பப் பிரச்னை காரணமாகத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் தனது அறைக்கு சென்று கதவை உள் பக்கமாக தாளிட்டுக் கொண்டாராம். பிரச்னை காரணமாக வைஷ்ணவி அவரது அறைக்கு செல்லவில்லையாம்.
 இரவு உணவு சாப்பிட சங்கரன் அறையை விட்டு வெளியே வரவில்லை. அதனால் சந்தேகமடைந்த வைஷ்ணவி கணவரின் செல்லிடப்பேசிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அந்த அழைப்பை சங்கரன் எடுக்கவில்லை. இதனால் வீட்டில் இருந்தவர்கள் சங்கரனின் அறை கதவைத் தட்டியுள்ளனர். அப்போதும் அவரது கதவைத் திறக்காத நிலையில், நள்ளிரவில் அறையின் கதவு உடைக்கப்பட்டது.
 உள்ளே சென்று பார்த்தபோது, சங்கரன் மின்விசிறியில் தூக்கிட்டுத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரது உடலை மீட்டுமயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனைக்குச் கொண்டு சென்றனர்.
 அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
 இதைக் கேட்டு சங்கரன் மனைவி வைஷ்ணவி மற்றும் இரண்டு பெண்குழந்தைகளும் கதறி அழுதது அங்கிருந்தோரை கண்கலங்க வைத்தது.
 ஊத்தங்கரைக்கு கொண்டு செல்லப்பட்ட உடல்: இதைத் தொடர்ந்து மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை அனுப்பினர்.
 பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவரது உடல் அகாதெமிக்கு கொண்டு செல்லப்பட்டு மாணவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் பிறகு சங்கரன் உடல் இறுதிச் சடங்குக்காக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
 700-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை உருவாக்கியவர்
 சங்கரன் எம்.எஸ்.சி. வேளாண்மை படிப்பை முடித்துவிட்டு, ஐ.ஏ.எஸ்.-ஆக வேண்டும் என்ற கனவுடன் நாமக்கல்லில் இருந்து சென்னை வந்தார். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய அவர் இரு முறை நேர் காணல் வரை சென்றார். 3-ஆவது முறை நிச்சயம் வெற்றி பெறலாம் என்று எண்ணி இருந்த அவருக்கு வயது வரம்பு தடையாக மாறியது. தனது கனவு தகர்ந்தாலும், தன்னைப் போல வரும் இளைஞர்களின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆகும் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பிய அவர் சென்னை அண்ணா நகரில் 2004-ஆம் ஆண்டு 34 மாணவர்களுடன் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாதெமியைத் தொடங்கினார். இப்போது 1,500 பேர் பயிற்சி பெறுகின்றனர். இந்த அகாதெமிக்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் கிளைகள் உள்ளன.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com