ஜெயலலிதா வாரிசு விவகாரம்: அம்ருதா மனு தள்ளுபடி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு எனக் கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா தாக்கல் செய்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் தள்ளுபடி செய்தார்.
ஜெயலலிதா வாரிசு விவகாரம்: அம்ருதா மனு தள்ளுபடி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு எனக் கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா தாக்கல் செய்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் தள்ளுபடி செய்தார்.
 ஆதாரங்கள் இல்லாததால் அம்ருதாவின் மனுவைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 வழக்கு என்ன?: சென்னை உயர்நீதிமன்றத்தில் பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா, தான் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு என்றும், தங்கள் குல வழக்கப்படி அவரது உடலை மீண்டும் எடுத்து அடக்கம் செய்ய அனுமதிக்கவும், பாதுகாப்பு வழங்கவும் கோரியிருந்தார்.
 மேலும், தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
 இந்த வழக்கை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: ""ஜெயலலிதாவின் மகள் என்பதற்கான எந்தவிதமான ஆதாரங்களையும் அம்ருதா தாக்கல் செய்யவில்லை. அந்த ஆவணங்களைத் தாக்கல் செய்யாததால் மரபணு சோதனைக்கு உத்தரவிட முடியாது. மனுதாரரான அம்ருதா கடந்த 1980-ஆம் ஆண்டு பிறந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
 ஆனால், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விடியோ ஆதாரத்தில், அந்த ஆண்டு நடைபெற்ற திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட ஜெயலலிதா கர்ப்பிணியாக இருந்ததாக தெரியவில்லை.
 மேலும், ஜெயலலிதாவுடன் இருந்துள்ளார் என்பதற்காக புகைப்படம் உள்ளிட்ட எந்தவொரு ஆவணங்களையும் அம்ருதா தாக்கல் செய்யவில்லை.
 ஆதாரமாக கருத முடியாது: மேலும், ஜெயலலிதாவுடன் பலமுறை தொலைபேசியில் பேசியதாக அம்ருதா கூறியிருப்பதை இந்த நீதிமன்றம் சிறந்த ஆதாரமாகக் கருத முடியாது. ஜெயலலிதாவை வைணவ முறைப்படி அடக்கம் செய்யக் கோரி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோரிடம் முறையிட்டுள்ளார்.
 ஒருவரின் தனிபட்ட விவகாரத்தில் நீதிபதிகள் தலையிட வேண்டியதில்லை. மேலும், அம்ருதா எந்தவிதமான குறைந்தபட்ச ஆதாரங்களும் இல்லாமல் மரபணு சோதனை நடத்த கோர முடியாது.
 ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்மம்: அதே போன்று அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், உடற்பயிற்சி செய்தார், அரசு அலுவலர்களைச் சந்தித்தார் எனப் பல தகவல்கள் கூறப்பட்டாலும், ஜெயலலிதாவின் மரணம் மர்மமாகவே உள்ளது.
 தள்ளுபடி செய்வது ஏன்?: ஜெயலலிதாவின் உறவினர்களான தீபா, தீபக் இடையே ஒற்றுமை இல்லை என்றாலும், அவர்கள் வைணவ முறைப்படி ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் ஆர்வம் காட்டவில்லை என்பது தெளிவாகிறது. ஜெயலலிதாவின் மகள் நான்தான் என்பதை நிரூபிக்க எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களையும் சமர்ப்பிக்க அம்ருதா தவறியதால் இந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்'' எனக் கூறி நீதிபதி உத்தரவிட்டார்.
 விடியோ ஆதாரம்: இந்த வழக்கு விசாரணையின் போது அரசுத் தரப்பில் விடியோ ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், இந்த வழக்கில் மனுதாரர் சமர்ப்பித்துள்ள ஆதாரங்கள் அனைத்தும் வலுவற்றவை.
 வழக்கைத் தொடர்ந்துள்ள மனுதாரர் கடந்த 1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதே ஆண்டில் ஜூலை மாதம் நடந்த பிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஜெயலலிதா கலந்துகொண்டுள்ளார். இது குறித்த விடியோ ஆதாரம் நீதிபதியிடம் திரையிட்டுக் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com