புதுவையில் முதலீடு செய்ய உகந்த சூழல் உள்ளது: முதல்வர் நாராயணசாமி

அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் புதுவையில்தான் முதலீட்டுக்கு உகந்த சூழல் உள்ளது என்று அந்த மாநில முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.

அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் புதுவையில்தான் முதலீட்டுக்கு உகந்த சூழல் உள்ளது என்று அந்த மாநில முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
 புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 5-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டுக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியதாவது:
 புதுவைக்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மாநில அரசு சட்டம் - ஒழுங்குக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால், புதுவை அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 புதுவை அனைத்து நாடுகளின் கலாசாரத்துக்கும் மதிப்பு அளிக்கும் மாநிலமாகும். கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், புதுவையில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழல் உள்ளது.
 சுற்றுலாத் துறை வளர்ச்சி பெற்று வருவதால், இந்தத் துறையில் முதலீடு செய்ய வெளிநாடு, வெளிமாநில முதலீட்டார்கள் முன்வர வேண்டும். புதுவையைப் பொருத்தவரை, 60 சதவீதப் பகுதிகள் நகர்ப் பகுதிகளாகும். 40 சதவீதப் பகுதிகள் மட்டுமே கிராமப் பகுதிகளாகும். எனவே, முதலீட்டாளர்கள் எளிதாக இங்கு தொழில் தொடங்க முடியும் என்றார் அவர்.
 சசிந்திரன் முத்துவேல்: மாநாட்டில் பங்கேற்ற வெஸ்ட் நியூ பிரிட்டன் பிராவின்ஸ் பப்புவா நியூ கினியா ஆளுநர் சசிந்திரன் முத்துவேல் பேசியதாவது:
 தமிழகத்தின் சிவகாசியைச் சேர்ந்தவன் நான். எனது மனைவி திருநெல்வேலியைச் சேர்ந்தவர். பசிபிக் பகுதியில் உள்ள மிகப்பெரிய தீவு நாடான் பப்புவா நியூ கினியாவில் குடியேறி, அந்த நாட்டின் குடியுரிமை பெற்றேன். தற்போது, இங்குள்ள முதல்வருக்கு இணையான அதிகாரம் கொண்ட ஆளுநர் பதவியில் உள்ளேன்.
 இந்தியாவைப் போலவே பப்புவா நியூ கினியாவிலும் பல மொழிகள் பேசும் மக்கள் வசிக்கின்றனர். இங்கு இயற்கை வாயு, சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய பெரிய அளவில் வாய்ப்புகள் உள்ளன.
 எதிர்வரும் நவம்பர் 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை எபக்ஸ் உச்சி மாநாடு இங்கு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜி 20 கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே, பப்புவா நியூ கினியாவில் முதலீடு செய்ய தமிழகம், புதுவையைச் சேர்ந்த தொழில்முனைவோர்கள் முன்வர வேண்டும் என்றார் அவர்.
 மாநாடு நடைபெறும் நாள்களில் காலை, மாலையில் பல்வேறு அமர்வுகள் நடைபெற உள்ளன. வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை (அக். 14) நிறைவடைகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com