மலையேற்றம் செய்ய புதிய விதிகள்: சுற்றுச்சூழல்-வனத்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு

மலையேற்றம் செய்வதற்கான பாதைகளை மூன்றாகப் பிரித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் உத்தரவிட்டுள்ளார்.
மலையேற்றம் செய்ய புதிய விதிகள்: சுற்றுச்சூழல்-வனத்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு

மலையேற்றம் செய்வதற்கான பாதைகளை மூன்றாகப் பிரித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் உத்தரவிட்டுள்ளார்.
 மேலும், ஒவ்வொரு குழுவிலும் தலா 5 பேர் மட்டுமே இடம்பெறுவர் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
 தேனி மாவட்டம் கொட்டக்குடி காப்புக்காடு பகுதியில் (குரங்கணி மலைப் பகுதி) ஏற்பட்ட காட்டுத் தீயில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டோர் கடந்த மார்ச் மாதம் விபத்தில் (குரங்கணி விபத்து) சிக்கி உயிரிழந்தனர். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி புதிதாக பரிந்துரைகள் அளிக்கப்பட்டன.
 புதிய விதிகள் உருவாக்கம்: மலையேற்றம் செய்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், வன வளங்களைப் பாதுகாப்பதும் அவசியமாகும். எனவே, மலையேற்றத்துக்கான விதிகளை நெறிப்படுத்துவது மிகவும் முக்கியம். இதைக் கருத்தில் கொண்டு விசாரணைக் குழுவின் மூலமாக அரசுக்கு பரிந்துரைகள் அளிக்கப்பட்டிருந்தன. இந்த பரிந்துரைகள் அடிப்படையில் புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:-
 1. மலையேற்றம் மேற்கொள்ள விரும்பும் குழுவினர் அல்லது நபர்கள் அந்தந்த மாவட்ட வன அலுவலர், வன உயிரினக் காப்பாளர், துணை இயக்குநரின் முன்அனுமதியை உரிய முறையில் பெற்றிட வேண்டும்.
 2. மலையேற்றம் மேற்கொள்வதற்கான பாதைகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எளிதான பாதை, மிதமான பாதை, கடினமான பாதை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
 3. எளிதான பாதைக்கு நபருக்கு ரூ.200-ம், மிதமான பாதைக்கு ரூ.350-ம், கடினமான பாதைக்கு ரூ.500-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பயணிகளைப் பொருத்தவரையில், எளிதான பாதைக்கு நபருக்கு ரூ.1,500-ம், மிதமான பாதைக்கு நபருக்கு ரூ.3 ஆயிரமும், கடினமான பாதைக்கு ரூ.5 ஆயிரமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 4. இப்போது உருவாக்கப்பட்டுள்ள விதிகளின்படி, எளிதான பாதை, மிதமான பாதைகளில் மலையேற்றம் மேற்கெள்ளும் குழுவில் 5 பேர் இடம்பெறுவர். அவர்களுடன் ஒரு வழிகாட்டியும் இருப்பார்.
 5. கடின பாதையில் மலையேற்றம் மேற்கொள்ளும் போது ஒரு வழிகாட்டி மற்றும் வனஊழியர் ஒருவரையும் அழைத்துச் செல்ல வேண்டும். வனத்துறையில் பதிவு செய்து கொள்ளாத எந்தவொரு நிறுவனமோ, சங்கமோ, அமைப்போ மலையேற்ற பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்ய இயலாது.
 மலையேற்றப் பயிற்சி மேற்கொள்வதற்கு தடை செய்யப்பட்ட காலம், வழித்தடப் பயன்பாடு, மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டிய நேரம் ஆகியவற்றையும் உள்ளடக்கி விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று ஷம்பு கல்லோலிகர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com