"சபரிமலையைக் காப்போம்': சரணகோஷ பேரணி

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற சரணகோஷ யாத்திரையில் பெண்கள் உள்பட
"சபரிமலையைக் காப்போம்': சரணகோஷ பேரணி

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற சரணகோஷ யாத்திரையில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 இந்த யாத்திரை கோவை, புது சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோயிலில் தொடங்கி ஜி.பி. சந்திப்பு, சத்தி சாலை, காந்திபுரம் சிக்னல் வழியாக வி.கே.கே.மேனன் சாலையில் நிறைவடைந்தது. இந்த யாத்திரையில் பஜனை, பக்தி பாடல்களைப் பாடியும், நடனமாடியும் பக்தர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
 இதுகுறித்து, தேசியத் தென்னை நார் வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
 ஐயப்பனை எவ்வாறு வணங்க வேண்டும் என்பதை ஹிந்து தர்மம்தான் தீர்மானிக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் அண்மையில் வெளியிட்ட உத்தரவு நமது பண்பாடு, கலாசாரத்தைக் காக்கும் வகையில் உள்ளதா என்பதை நீதிபதிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புகள் தனிமனிதனின் ஒழுக்கக் கேட்டையும், மனக் கட்டுப்பாட்டையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளன. மனித குலத்துக்கு ஏற்ற தீர்ப்பை நீதிமன்றம் வழங்க வேண்டும் என்றார்.
 இந்த யாத்திரையில் அவினாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் பி.ஆர்.கிருஷ்ணகுமார், கோவை ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத் தலைவர் கே.கே.ராமசந்திரன், செயலாளர் கே.விஜயகுமார், துணைச் செயலாளர்கள் பத்ரசாமி, விஸ்வநாதன், பொருளாளர் வேலாயுதம், கோவை சக்தி டெக்ஸ்டைல்ஸ் செயல் இயக்குநர் ராஜ்குமார் ஆகியோர் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 உதகையில்... நீலகிரி மாவட்டம், உதகையில் "சபரிமலை புனிதத்தைக் காப்போம்' என வலியுறுத்தியும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்தும் பேரணி நடைபெற்றது. பேரணியாகச் செல்ல மணிக்கூண்டு சாலை வரை மட்டுமே காவல் துறையினர் அனுமதி அளித்தனர். இதனால், பேரணியில் கலந்து கொண்டவர்கள் சாலையில் அமர்ந்து காவல் துறைக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது, பேரணியில் சென்றவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து, பேரணியில் பங்கேற்றவர்கள் ஐயப்பன் கோயிலுக்கு செல்ல காவல் துறையினர் அனுமதி அளித்தனர்.
 குடியாத்தத்தில்... வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் ஐயப்ப பக்தர்கள், இந்து முன்னணியினர் சார்பில் சனிக்கிழமை விளக்கேந்தி ஊர்வலம் நடைபெற்றது.
 புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோயில் அருகிலிருந்து தொடங்கிய ஊர்வலத்தை, இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ் தொடங்கி வைத்தார். இதில், மாவட்டச் செயலர் ஆதிசிவா, ஒன்றியத் தலைவர் தரணி, ஒன்றியச் செயலர் பிரபாகரன், ஐயப்ப சேவா சங்க குருசாமிகள் ஆர்.எஸ். சண்முகம், வெங்கடேசன், காந்தி, பாஜக இளைஞர் அணிச் செயலர் லோகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோபலாபுரம் கெங்கையம்மன் கோயிலை அடைந்தது. அங்கு பெண்கள் சபரிமலை கோயிலுக்குச் செல்ல மாட்டோம் என உறுதி ஏற்றனர்.
 தூத்துக்குடியில்... சபரிமலை ஐயப்பன் கோயில் புனிதத்தை காக்க வலியுறுத்தி, தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
 தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற இந்த ஊர்வலத்துக்கு, மாநகர செயலர் சிவலிங்கம் தலைமை வகித்தார். தூத்துக்குடி சிவன் கோயில் முன்பிருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்கள், கையில் ஐயப்பன் படத்துடன் விளக்கேற்றி ரத வீதிகளை சுற்றி வந்து, மீண்டும் சிவன் கோயிலை வந்தடைந்தனர்.
 திருச்சியில்... திருச்சி தென்னூர் அண்ணாநகர் அருள்மிகு உக்கிரமாகாளியம்மன் கோயில் அருகில் தொடங்கிய ஊர்வலத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயல் தலைவர் எஸ்.ஆர்.சபரிதாசன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலர் எம். ஸ்ரீதர் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com