தாமிரவருணி மஹா புஷ்கரம்: புனித நீராடி நதிக்கரையில் சிறப்பு வழிபாடு

தாமிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி, திருநெல்வேலி மாவட்ட படித்துறைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி நதிக்கரையில் சிறப்பு வழிபாடுகளைச் செய்தனர்.
தாமிரவருணி மஹா புஷ்கரம்: புனித நீராடி நதிக்கரையில் சிறப்பு வழிபாடு

தாமிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி, திருநெல்வேலி மாவட்ட படித்துறைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி நதிக்கரையில் சிறப்பு வழிபாடுகளைச் செய்தனர்.
 தாமிரவருணி மஹா புஷ்கர விழா இம் மாதம் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பாபநாசம் முதல் புன்னைக்காயல் வரை உள்ள 149 படித்துறைகளிலும் பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். சனிக்கிழமை அதிகாலையிலேயே வெளிமாவட்ட, வெளிமாநில பக்தர்கள் ஏராளமானோர் திருநெல்வேலி மாவட்ட படித்துறைகளில் குவிந்தனர். அவர்கள் பால், மஞ்சள் ஆகியவற்றை ஆற்றில் கரைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் புனித நீராடிய பக்தர்கள் காயத்ரி மந்திரம், திருப்பாவை, திருவெம்பாவை, திருவாசக பாடல்களை உச்சரித்து மும்மூர்த்திகளை வழிபட்டனர். தாமிரவருணி அன்னையை நோக்கி வழிபட்டு பாவங்களைப் போக்கி சகல வளங்களையும் அருள மனமுருகி வேண்டினர்.
 சிறப்பு ஏற்பாடுகள்: திருநெல்வேலி மாநகர பகுதி படித்துறைகளில் தெலுங்கு, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் பக்தர்களுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டன. தர்ப்பணம் கொடுப்பவர்களுக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டதால், படித்துறைக்கு குளிக்க வரும் பக்தர்கள் சிரமம் இன்றி நீராடினர். துப்புரவுப் பணியாளர்கள் நதியில் விடப்பட்ட மலர்கள், காகிதங்களை உடனுக்குடன் சேகரித்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து 3 ஆவது நாளாக மருத்துவக் குழுவினரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும் பணியமர்த்தப்பட்டிருந்தனர். திருநெல்வேலி குறுக்குத்துறையில் நதிக்கரைக்கு பேட்டரி கார்களில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
 தாமிரவருணி புஷ்கர குழு சார்பில் திருநெல்வேலி தைப்பூச மண்டபத்தில் காலையில் திருப்பள்ளியெழுச்சி, மங்கள நாகசுர இசை, சங்கல்ப ஸ்நானம், புனித நீராடல், திருமுறை, திருமுறை இன்னிசை, சதுர்வேத பாராயணம் ஆகியவை நடைபெற்றன. மாலையில் ஓதுவாமூர்த்திகளின் பன்னிரு திருமுறை பண்ணிசையும், மாலையில் வேத கோஷத்துடன் மங்கள ஆரத்தியும் நடைபெற்றன. சீவலப்பேரியில் துர்காம்பிகா தேவஸ்தானம் சார்பில் நடைபெற்ற தாமிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி, சகல தோஷங்களையும் விலக்கும் நவக்கிரக ஹோமம் சனிக்கிழமை நடைபெற்றது. மாலையில் மங்கள ஆரத்தி நடைபெற்றது. திருநெல்வேலி குறுக்குத்துறையில் நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. பின்பு யாகசாலை கூடத்தில் இருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தாமிரவருணி நதியில் ஊற்றிய பின்பு வேத மந்திரங்கள் முழங்க பக்தர்கள் நீராடினர்.
 நிர்வாகிகள் எஸ்.மகாலட்சுமி சுப்ரமணியன், வளசை கே.ஜெயராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com