வைகை, மஞ்சளாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

வைகை, மஞ்சளாறு மற்றும் பாலாறு பொருந்தலாறு ஆகிய அணைகளில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்று


வைகை, மஞ்சளாறு மற்றும் பாலாறு பொருந்தலாறு ஆகிய அணைகளில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: 
வைகை அணை: மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலுள்ள பெரியாறு பிரதான பாசன பகுதிகளில் கடந்த ஏழு ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தால், வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டுமென கோரிக்கைகள் வந்துள்ளன. இதையேற்று, மதுரை மற்றும் சிவங்கை மாவட்டங்களிலுள்ள பெரியாறு நீட்டிப்பு பாசனப் பகுதிகளுக்கு குடிநீர்த் தேவைக்காக 345.60 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் வைகை அணையில் இருந்து வரும் 22-ஆம் தேதி முதல் 20 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
மஞ்சளாறு: தேனி மாவட்டம் தேவதானப்பட்டி கிராமத்தில் உள்ள மஞ்சளாறு அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு வரும் 24 முதல் டிசம்பர் 15 வரை 60 கனஅடி வீதமும், டிசம்பர் 16 முதல் ஜனவரி 31 வரை 50 கனஅடி வீதமும், பிப்ரவரி 1 முதல் மார்ச் 15 வரை 45 கனஅடி வீதமும், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 28 வரை 30 கனஅடி வீதமும், மார்ச் 1 முதல் மார்ச் 15 வரை 20 கனஅடி வீதமும் என மொத்தம் 1035.50 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும்.
இதனால், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு பகுதிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்து 259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
பாலாறு பொருந்தலாறு: திண்டுக்கல் மாவட்டம் பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து தாடாகுளம் முதல் போக பாசனத்துக்காக வரும் 24 முதல் மார்ச் 2 வரை தண்ணீர் திறந்து விடப்படும். இதனால், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com