பேரணியில் வந்த ஒன்றரை லட்சம் பேரை கட்சியை விட்டு நீக்குவார்களா?: திமுக தலைமைக்கு அழகிரி கேள்வி 

இன்றைய அமைதிப் பேரணியில் கலந்து கொண்ட ஒன்றரை லட்சம் பேரை கட்சியை விட்டு நீக்குவார்களா  என்று திமுக தலைமைக்கு மு.க. அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
பேரணியில் வந்த ஒன்றரை லட்சம் பேரை கட்சியை விட்டு நீக்குவார்களா?: திமுக தலைமைக்கு அழகிரி கேள்வி 

சென்னை: இன்றைய அமைதிப் பேரணியில் கலந்து கொண்ட ஒன்றரை லட்சம் பேரை கட்சியை விட்டு நீக்குவார்களா  என்று திமுக தலைமைக்கு மு.க. அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி திமுகவில் தன்னைச் சேர்க்க வேண்டும் என்று கோரி வருகிறார். ஆனால், ஸ்டாலின் தரப்பில் இருந்து இதற்கு எந்தவிதப் பதிலும் கிடைக்கவில்லை. 

இதையடுத்து, அழகிரி தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் திருவல்லிக்கேணியில் இருந்து கருணாநிதி நினைவிடம் நோக்கி இன்று (புதன்கிழமை) பேரணி நடத்துவதாக அறிவித்திருந்தார்.   இந்த பேரணியில் 1 லட்சத்துக்கும் மேலான தனது ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்திருந்தார். 

புதனன்று காலை 10 மணி அளவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட இந்த அமைதிப் பேரணி 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இந்த பேரணிக்கு அழகிரி தலைமை தாங்கி வழிநடத்தினார். 

திருவல்லிக்கேணி காவல் நிலைய சந்திப்பில் இருந்து கருணாநிதியின் நினைவிடத்துக்கு செல்லும் வழிகளில் பாதுகாப்பு காரணம் கருதி ஏராளமான போலீஸார் குவிக்கப் பட்டிருந்தனர். 

சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த பேரணியானது கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைந்தது. அங்கு நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்திய அழகிரி மற்றும் அவரது குடும்பத்தார் அதனை வலம் வந்து வணங்கினார்கள்.

இந்த பேரணியின் முடிவில் செய்தியாளர்களைச் சந்திப்பேன் என்று அழகிரி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

முன்பே கூறிய படி இது எனது தந்தைக்கு மவுன அஞ்சலி செலுத்தும் பேரணி மட்டும்தான். வேறு எந்த நோக்கமும் கிடையாது. இந்த பேரணியில் கலந்து கொண்ட தலைவர் கலைஞரின் உண்மைத் தொண்டர்களுக்கும், எனது விசுவாசிகளுக்கும் என்னுடைய நன்றியை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.   

அதே போல பேரணி சிறப்பாக நடக்க உதவிய காவல்துறையினருக்கும், அழைப்பை ஏற்று வந்திருந்த தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்து விடை பெறுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது அவரிடம் அழகிரிக்கு வரவேற்பு அளித்த திமுக நிர்வாகி ரவி கட்சியை விட்டு நீக்கப்பட்டது குறித்து கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு அவர் இன்றைய அமைதிப் பேரணியில் கலந்து கொண்ட ஒன்றரை லட்சம் பேரையும்  கட்சியை விட்டு நீக்குவார்களா என்று  கேள்வி எழுப்பி விட்டு கோபமாகச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com