ராஜீவ் காந்தி கொலை: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தலைவர்கள் வரவேற்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
ராஜீவ் காந்தி கொலை: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தலைவர்கள் வரவேற்பு


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
மு.க.ஸ்டாலின் (திமுக): ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியுடன் வரவேற்கத்தக்கது. இதைத்தான் கருணாநிதி ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்தார். முதல்வர் உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, 7 பேரின் விடுதலை முடிவை எடுக்க வேண்டும். 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர்களை, மேலும் காலதாமதமின்றி விடுதலை செய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அமைச்சரவையை தமிழக அரசு கூட்டி ஏழு தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்குப் பரிந்துரை வழங்க வேண்டும். அதையேற்று உடனடியாக அவர்களைக் காலதாமதமின்றி விடுதலை செய்ய வேண்டும்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): உச்ச நீதிமன்றத்தீர்ப்பைப் பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய சட்ட ரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
வைகோ (மதிமுக): தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இத்தீர்ப்பு, இந்திய அரசியல் சட்டத்தின் 161-ஆவது பிரிவு மாநிலங்களுக்கு வழங்கும் அதிகாரத்தைத் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தி விட்டது. இனிமேல் மாநில அரசின் அதிகாரத்தில் இத்தகைய பிரச்னைகளில் மத்திய அரசு குறுக்கிட முடியாது.
அன்புமணி (பாமக): 7 பேரின் விடுதலைக்கு கடந்த நான்கரை ஆண்டுகளாக தேவையில்லாத முட்டுக்கட்டைகளை மத்திய அரசு போட்டு வந்தது. அவை அனைத்தையும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தகர்த்திருக்கிறது. இதையும் முடக்கும் நோக்கத்துடன் சீராய்வு மனு, மேல்முறையீட்டு மனு போன்றவற்றை மத்திய அரசு தாக்கல் செய்யக் கூடாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் நகலை தமிழக அரசு உடனடியாகப் பெற்று, அமைச்சரவையைக் கூட்டி 7 பேரயைம் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். 
பழ.நெடுமாறன் (தமிழர் தேசிய முன்னணி): உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன்.  அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆண்டு நிறைவுற உள்ள இக்காலகட்டத்தில் 7 பேரையும் விடுவித்து முதல்வர் தனது வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டும்.
தொல். திருமாவளவன் (விசிக): தமிழக அரசே இவர்களை விடுதலை செய்ய முடியும் என்று விசிக கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாட்டையே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உறுதிசெய்துள்ளது. எனவே பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கி.வீரமணி (திராவிடர் கழகம்): முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 7 பேரையும் விடுதலை செய்வதில் உறுதியாக இருந்தார். உச்ச நீதிமன்ற உத்தரவைப் பயன்படுத்தி உடனடியாக அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
நிஜாமுதீன் (இந்திய தேசிய லீக்): உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தெளிவாக்கப்பட்ட அதிகாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தி அமைச்சரவையைக் கூட்டி 7 பேரையும், 10 ஆண்டுகளைக் கடந்து தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகளையும் பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்.
டிடிவி தினகரன் (அமமுக): பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுவிக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதுதான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பமாக இருந்தது. அதை உணர்ந்து, தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி ஏழு பேரையும் விடுவிக்கும்படி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்.
ஜவாஹிருல்லா (மமக), தி.வேல்முருகன் ( தமிழக வாழ்வுரிமைக் கட்சி) ஆகியோரும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com