சிறைச்சாலை சுவர்களுக்கு உள்ளே..!

தமிழக சிறைகளில் கைதிகளிடம் செல்லிடப்பேசிகள் தாராளமாக புழங்கி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்கு சிறைத் துறை நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிறைச்சாலை சுவர்களுக்கு உள்ளே..!

தமிழக சிறைகளில் கைதிகளிடம் செல்லிடப்பேசிகள் தாராளமாக புழங்கி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்கு சிறைத் துறை நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக சிறையில் கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் சிறைத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேவேளையில், சிறைக்குள் கைதிகள் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கும், அவர்களுக்குள் மோதல் ஏற்படாமல் இருப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளும் உள்ளன. இதற்காக, கைதிகளுக்கென தனி நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்த நடத்தை விதிமுறைகள் செல்வாக்குள்ள கைதிகளிடம் மென்மையாகவும், பின்புலம் அற்ற கைதிகளிடம் கடுமையாகவும் கடைப்பிடிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

பாதுகாப்பு இல்லாத உயர் பாதுகாப்பு பிரிவு

புழல் உள்ளிட்ட அனைத்து மத்திய சிறைகளிலும் உள்ள உயர் பாதுகாப்புப் பிரிவு தனித் தீவாக இருப்பதாக சிறைக் காவலர்கள் கூறுகின்றனர். இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடைபெறுவதால், தங்களுக்கே பாதுகாப்பு இல்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

அதேவேளையில், தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடாது என்று உறுதி பெற்றுக்கொண்ட சிறைக் காவலர்கள், புழலில் உள்ள உயர் பாதுகாப்புப் பிரிவில் இதுவரை சிறைத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதே இல்லை என்று தெரிவித்தனர். இதனால் அங்கு அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள், சிறைத் துறையின் எந்த விதிமுறைகளையும் பின்பற்றுவது இல்லை என்பதோடு அனைத்து சட்ட விரோத செயல்களிலும் ஈடுபடுவதாகவும், இங்கு அனுமதி இன்றி தொலைக்காட்சி பெட்டி, டிவிடி பிளேயர், ரேடியோ, மடிக்கணினி, செல்லிடப்பேசி, தனி சமையல்அறை என ஒரு வீட்டுக்கு தேவையான சகல வசதிகளும் இடம்பெற்றுள்ளன எனவும் அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

ரௌடிக்காக அத்துமீறல்

அண்மைக்காலமாக சிறைத்துறையைச் சேர்ந்த ஒரு உயர் அதிகாரி, தனது சகோதரரான ஒரு ரௌடிக்காக கைதிகளின் விதிமீறல்களுக்கு துணை போவதாக சிறைத் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதையும் தாண்டி அவ்வப்போது நடைபெறும் சோதனையில் ஒருசில செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்படுவதாக சிறை அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.

உணவு பொருளுடன் கடத்தப்படும் செல்லிடப்பேசி

சிறைக்குள் செல்லிடப்பேசிகள் காய்கறிகள், உணவுப் பொருள்கள் ஆகியவற்றுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வரப்படுகின்றன. இவற்றை ஸ்கேன் செய்ய ஸ்கேனர் இருந்தும், அவற்றில் சிக்காத வகையில் சில சிறைத் துறை அதிகாரிகளே பார்த்துக் கொள்கின்றனர். மேலும் வெளியில் இருந்தும் சிறைக்குள் செல்லிடப்பேசிகள் வீசப்படுகின்றன.

சிறைக்குள் செல்லிடப்பேசிகளை கழிப்பறைகள், அறைகளின் மேற்கூரைப் பகுதிகள், மரங்களுக்கு அடியில் என பாதுகாப்பாக கைதிகள் மறைத்து வைக்கின்றனர். மேலும் செல்லிடப்பேசிகளை தொலைக்காட்சி பெட்டி, மின்விசிறி, மின்விளக்கு ஆகியவற்றின் மின் இணைப்புகளில் சார்ஜ் செய்கின்றனர்.

செல்லிடப்பேசியில் பேச கட்டணம்

சிறைக்குள் செல்லிடப்பேசிகள் சிறைத் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் உதவியுடன் கொண்டு வரப்படுகின்றன என சிறைக் காவலர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறியது:

"சிறைக்குள் ஒரு செல்லிடப்பேசியை கொண்டு வருவதற்கு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை லஞ்சமாகப் பெறப்படுகிறது. பின்னர் செல்லிடப்பேசி வைத்திருக்கும் கைதிகள், சம்பந்தப்பட்ட சிறைத் துறை அதிகாரிக்கு வாரம்தோறும் லஞ்சம் தருகின்றனர். சிறைக்குள் செல்லிடப்பேசியில் பிற கைதிகள் பேசுவதற்கு, செல்லிடப்பேசி வைத்திருக்கும் ஒரு கைதி வாரத்துக்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரம் வாடகைக் கட்டணம் வசூலிக்கிறாராம். 

அத்துடன் ஒவ்வொரு அழைப்புக்கும் தனியாகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. செல்லிடப்பேசி வைத்திருக்கும் கைதிகள் மீது நடவடிக்கை எடுக்க, சில சிறைத் துறை அதிகாரிகள் காவலர்களை அனுமதிப்பதில்லை. இதனால் கைதிகளிடம் செல்லிடப்பேசி தாராளமாகவே புழங்குகிறது'' என்கின்றனர் சிறையிலிருந்து வெளிவந்த கைதிகள்.

செயல்படாத தொலைபேசி மையங்கள்

தமிழக சிறைகளில் கைதிகளுக்காக தொடங்கப்பட்ட தொலைபேசி மையங்கள் போதிய பராமரிப்பு இன்றி செயலிழக்கத் தொடங்கியுள்ளன.

செல்லிடப்பேசி பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரூ. 1.58 கோடி மதிப்பில் தமிழகத்தில் உள்ள சிறைகளில் தொலைப்பேசி மையங்கள் அமைக்கப்பட்டன. இதில் மத்திய சிறைகளான புழல்-7, வேலூர்-7, கடலூர்-3, திருச்சி-8, சேலம்-5, கோயம்புத்தூர்-8, மதுரை-5, பாளையங்கோட்டை-6 என்ற அளவில் தொலைபேசிகள் அமைக்கப்பட்டன.

அதேபோல புழல், வேலூர், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள பெண்கள் சிறப்பு சிறைகள், புதுக்கோட்டை சிறுவர் கூர்நோக்கு இல்லம் ஆகியவற்றிலும் தலா ஒரு தொலைபேசி மையம் அமைக்கப்பட்டன. இந்த தொலைபேசி மையத் திட்டம் தொடங்கிய காலக்கட்டத்தில் முறையாக பராமரிக்கப்பட்டு, இயக்கப்பட்டன. இதில் கைதி பேசுவதற்கு, ஒரு மாதத்துக்கு 45 நிமிஷம் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த தொலைபேசி மையங்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் செயலிழக்கத் தொடங்கியுள்ளன என்று சிறைத் துறையினர் தெரிவித்தனர். இது கைதிகளை மறைமுகமாக செல்லிடப்பேசியைப் பயன்படுத்த தூண்டுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். சிறைக்குள் செல்லிடப்பேசிக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைப்பவர்கள், இத் தொலைபேசி மையங்களை முறையாக பராமரிப்பதற்குரிய நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

நட்சத்திர ஹோட்டலை விஞ்சும் சொகுசு அறைகள்

போதைப் பொருள் கடத்தல் வழக்கு, கள்ளநோட்டு வழக்கு, கள்ளத் துப்பாக்கி வழக்கு, அரசியல் மற்றும் மத இயக்கத் தலைவர்கள் கொலை வழக்கு ஆகியவற்றில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள், சென்னை புழல் சிறையில், நட்சத்திர ஹோட்டல்களின் உள்ளதைப் போன்ற அறைகளில் சொகுசாக தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

இந்த அறைகளின் புகைப்படங்கள், புழல் சிறையில் நடைபெறும் அத்துமீறல் தொடர்பான புகைப்படங்கள் 'தினமணி'க்கு கிடைத்துள்ளன.

விதிகள் மீறப்பட்டு, சொகுசு படுக்கைகள், ஜன்னல்களில் திரைச்சீலைகள், தொலைக்காட்சி பெட்டி, டிவிடி பிளேயர், மைக்ரோ ஓவன், மின்சார சமையல் அடுப்பு, தனியாக மின்விசிறி, அறை முழுவதும் பல வண்ணங்களில் அடிக்கப்பட்டுள்ள பெயிண்டுகள், சுவரில் அழகாக வரையப்பட்டுள்ள ஓவியங்கள் என சிறைக்கான அடையாளங்களை எங்கும் காண முடியவில்லை. இவ்வாறு சகல வசதிகளும் நட்சத்திர ஹோட்டல் அறைகளுக்கு இணையாக உள்ளன. 

அந்த அறையைப் பார்க்கும்போது, அது சிறையில் உள்ள ஒரு அறைதானா என்ற சந்தேகம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. தான் செய்த குற்றத்தை உணரச் செய்யவே குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், சமூகத்தில் மிக மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் சொகுசு வாழ்க்கை நடத்தி வருவது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பயன்படாத ஜாமர்

செல்லிடப்பேசிகளைக் கட்டுப்படுத்தும் வகையில், உயர் பாதுகாப்புப் பிரிவில் உள்ள 9 மத்திய சிறைகளில் ரூ.5.40 கோடியில் 12 செல்லிடப்பேசி ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஜாமர் கருவிகள் 63 மீட்டர் சுற்றளவில் இருந்து 100 மீட்டர் சுற்றளவு வரையே செல்லிடப்பேசிகளை முடக்கும் திறன் கொண்டவை. அதிலும் சிறைகளில் பொருத்தப்பட்டுள்ள ஜாமர் கருவிகள் 3 ஜி அலைக்கற்றை வரையிலான செல்லிடப்பேசிகளை மட்டுமே முடக்கும் தொழில்நுட்ப வசதியைக் கொண்டவையாக உள்ளன. 4 ஜி அலைக்கற்றை செல்லிடப்பேசிகளை முடக்கும் திறன் ஜாமருக்கு இல்லை.

தற்போது 4 ஜி அலைக்கற்றையிலேயே செயல்படும் வகையில் பெரும்பாலான செல்லிடப்பேசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், ஜாமர் கருவிகள் சிறைகளில் பயனற்றதாக மாறி வருகின்றன. மேலும், 65 சதுர மீட்டர் சுற்றளவுக்கு மட்டுமே ஜாமரால் முழுத் திறனோடு செல்லிடப்பேசிகளை கட்டுப்படுத்த முடியும் என்பதால், பல ஆயிரம் சதுர மீட்டர் சுற்றளவு உள்ள சிறையில், ஜாமரின் கட்டுப்பாட்டு எல்லையைக் கடந்து கைதிகள் எளிதாக செல்லிடப்பேசிகளில் பேசுகின்றனர்.

சிறைக் காவலர்களின் கோரிக்கை

இப்பிரச்னையில் லஞ்சம் வாங்கிக் கொண்டு கைதிகள் செல்லிடப்பேசிகளை பயன்படுத்த அனுமதிக்கும் சிறைத்துறை அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து கைதிகளையும் சிறைத் துறை ஒரே மாதிரி நடத்த வேண்டும். சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட சிறையின் அனைத்துப் பகுதிகளிலும் அடிக்கடி சோதனை நடத்தப்பட வேண்டும் என்பதுதான் நம்மிடம் மிகுந்த வேதனையுடன் மனம் திறந்த சிறைக் காவலர்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com