வெறிச்சோடிக் கிடக்கும் அண்ணா நினைவிடம்...!

திராவிட இயக்கங்களின் நான்கு பெரும் தலைவர்கள் மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
வெறிச்சோடிக் கிடக்கும் அண்ணா நினைவிடம்...!

திராவிட இயக்கங்களின் நான்கு பெரும் தலைவர்கள் மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களது நினைவிடங்கள் சென்னை மாநகராட்சியின் முக்கியமான அடையாளமாக மாறிவிட்டிருக்கிறது. மெரீனா கடற்கரைக்குச் செல்லும் பொது மக்களில் பலரும் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய நான்கு தலைவர்களின் சமாதிகளுக்கும் சென்று பார்வையிடுவதை வழக்கமாக்கி விட்டிருக்கிறார்கள்.
கரை வேட்டியுடன் வரும் கட்சிக்காரர்கள் தாங்கள் நேசித்த தலைவர்களின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதையும், அஞ்சலியும் செலுத்துகின்றனர்.
முதன்முதலில்...: மெரீனா கடற்கரையில் முதன்முதலில் அன்றைய முதல்வர் அண்ணாவுக்கு நினைவிடம் எழுப்பப்பட்டது. அதனால் அண்ணா சதுக்கம் என்று அழைக்கப்பட்ட அந்த இடம் அதுமுதல், திராவிட இயக்கக் கட்சி முதல்வர்களின் நினைவிடத்துக்கான இடமாக மாறிவிட்டிருக்கிறது.
தமிழகத்தின் முதல்வராக இருந்த அண்ணாவின் மறைவை ஒட்டி, அவருக்கு நினைவிடம் அமைக்க அப்போதைய திமுக ஆட்சிக்காலத்தில் சுமார் 7.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் சுமார் 1.5 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் அண்ணாவுக்கான சமாதியும், மீதமுள்ள இடங்களில் பூங்கா, நினைவு அருங்காட்சியகம் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பூங்காவை பொதுப்பணித் துறையின் ஒத்துழைப்புடன் தமிழக அரசு பராமரித்து வருகிறது.
எம்.ஜி.ஆர். நினைவிடம்: தமிழகத்தில் மூன்று முறை தொடர்ச்சியாக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கும் மெரீனா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்தது. அவர், கடந்த 1987-ஆம் ஆண்டு டிசம்பர் 24-இல் காலமானார். அவருக்கு அண்ணா நினைவிடம் அருகிலேயே நிலம் ஒதுக்கப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டது. அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது. எம்.ஜி.ஆர். நினைவிடமும் சுமார் 7 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
கடற்கரை ஒழுங்குமுறைச் சட்டம்: அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்கள் அதிமுக, திமுக என அடுத்தடுத்து வந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் சீரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கென ஒவ்வொரு ஆண்டும் பொதுப்பணித் துறைக்கு நிதியும் ஒதுக்கப்படுகிறது. இந்த நினைவிடங்களில் பொது மக்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
அண்ணா, எம்.ஜி.ஆர்., நினைவிடங்களை அமைக்கும் போது கடற்பரப்பில் இருந்து குறிப்பிட்ட தொலைவு வரை எந்தக் கட்டுமானங்களும் கட்டக் கூடாது என்ற கடற்கரை ஒழுங்குமுறைச் சட்டம் நடைமுறையில் இல்லை. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக இந்தச் சட்டம் நீதிமன்ற உத்தரவுப்படி தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா - கருணாநிதி : கடற்கரை ஒழுங்குமுறைச் சட்டம் நடைமுறையில் இருப்பதால், அண்மைக்காலங்களில் காலமான முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோருக்கு கடற்கரைச் சாலையில் தனியாக இடம் ஒதுக்க வழியில்லாமல் போயிற்று. இதையடுத்து, ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு உள்ளும், கருணாநிதியின் உடல் அண்ணா நினைவிடத்துக்கு உள்ளேயும் அடக்கம் செய்யப்பட்டன.
நீண்ட பாதைகள்: அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி என திராவிட இயக்கத்தின் கவர்ச்சிகரமான தலைவர்களாக விளங்கிய நால்வரும் அடுத்தடுத்த இடங்களிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அண்ணா நினைவிடத்துக்குள் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தைப் பார்வையிட நீண்ட பாதை வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், முதலில் அண்ணா நினைவிடத்தைப் பார்க்க வழியில்லாமல் இரும்புத் தடுப்புகள் கொண்டு அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன. முதலில், கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தைப் பார்வையிட்ட பிறகே அண்ணா நினைவிடத்துக்குச் செல்லும்படி இரும்புத் தடுப்புகள் கொண்டு பாதைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
மாற்றி அமைக்க வேண்டுகோள்:பொது மக்களில் பலர் கருணாநிதியின் நினைவிடத்தைப் பார்த்து விட்டு அப்படியே நேராக புறப்பட்டு வெளியே வந்து விடுகின்றனர். இது குறித்து அவர்களில் சிலர் கூறுகையில், அண்ணா நினைவிடத்தைப் பார்த்து விட்டு அதன் பிறகு கருணாநிதி நினைவிடத்தைப் பார்ப்பதே சரியாக இருக்கும். எனவே, அதற்கு ஏற்றாற்போன்று பாதையை மாற்றி அமைக்க வேண்டும் என்றனர்.
அண்ணா நினைவிடத்துக்கு அருகிலேயே உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் இப்போதும் பொது மக்கள் தங்களது காதுகளை வைத்து எம்.ஜி.ஆரின் கைக்கடிகார சப்தம் கேட்கிறதா என ஆராய்வது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்குச் செல்பவர்கள் ஜெயலலிதா நினைவிடத்துக்கும் சென்று வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
எம்ஜிஆர், ஜெயலலிலதா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் நூற்றுக்கணக்கில் தொண்டர்களும், பொதுமக்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தும் நிலையில், இவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாகவும், திராவிட இயக்கத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வழிகோலியவருமான அண்ணாவின் சமாதி வெறிச்சோடிக் காணப்படுவது குறித்து சில திமுக தொண்டர்கள் வருத்தப்படுவது மெரீனா கடற்கரை அலைகளின் ஓலத்தில் காற்றாக கரைகிறது...!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com