வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் 10 ஆயிரம் ஹெக்டேரில் நெற்பயிர் கருகும் அபாயம்

நாகை மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியத்தை உள்ளடக்கிய வேதாரண்யம் பகுதியில் 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் பாசனத்துக்கு தண்ணீரின்றி கருகும்
பிராந்தியங்கரை- மகாராஜபுரம் பகுதியில் தண்ணீரின்றி, கருகும் நிலையில் உள்ள நெற்பயிர். (உள்படம்) வெடித்துக் காணப்படும் சம்பா பருவ நெல் சாகுபடி வயல்.
பிராந்தியங்கரை- மகாராஜபுரம் பகுதியில் தண்ணீரின்றி, கருகும் நிலையில் உள்ள நெற்பயிர். (உள்படம்) வெடித்துக் காணப்படும் சம்பா பருவ நெல் சாகுபடி வயல்.


நாகை மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியத்தை உள்ளடக்கிய வேதாரண்யம் பகுதியில் 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் பாசனத்துக்கு தண்ணீரின்றி கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வேதாரண்யம் பகுதியில், மானாவாரி நிலப்பரப்பு உள்பட சுமார் 27 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்வது வழக்கம். 
இந்த நிலையில், நிகழாண்டு ஜூலை மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த நீர் வெண்ணாறு கோட்டத்துக்குள்பட்ட முள்ளியாறு, அரிச்சந்திரா நதி, அடப்பாறு உள்ளிட்ட பிரதான ஆறுகளை வந்தடைந்தது.
கடைமடைக்கு தண்ணீர் செல்வதில் காலதாமதமானதால், பிரதான ஆறுகளின் மூலம் நேரடி பாசனம் பெறும் இடங்களில், வடகிழக்கு பருவகால வெள்ளத்தை எதிர்கொள்ள ஏதுவாக சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டன.
அந்த வகையில், ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் நேரடி நெல் விதைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து, மானாவாரி நிலப்பரப்பு, இறைவைப் பாசனப் பரப்புகளில் நேரடி விதைப்பு செய்வதற்கான பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கிய விதைப்புப் பணி, தலைஞாயிறு வேளாண் வட்டாரத்தில் சுமார் 8,500 ஹெக்டேரிலும், வேதாரண்யம் வேளாண் கோட்டத்தில் சுமார் 1,500 ஹெக்டேரிலும் முடிவடைந்தது.
இந்த பரப்புகளில் தற்போது சுமார் 30- 40 நாள்கள் வயதுடைய நெற்பயிர்கள் வளர்ந்துள்ளன. பாசன ஆறுகளில் தண்ணீர் குறைந்த நிலையில், எதிர்பார்த்த மழையும் பொய்த்துப் போனது. இதனால், சம்பா சாகுபடி வயல்களில் ஈரப்பதமே இன்றி, தரை வெடிக்கும் நிலையில் உள்ளது.
இந்த பயிர்கள் போதிய வளர்ச்சியை எட்டாத நிலையில் இருப்பதோடு, உர மேலாண்மை, பூச்சி நோய் கட்டுப்பாடு போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. பயிர் வெளிவந்த நாளில் இருந்து தண்ணீர் பாசனம் செய்யாத வயல்களும் ஏராளமாக உள்ளன.
வெயில் அதிகரித்து வருவதோடு, மழையும் இல்லாததால், சம்பா பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒருசில நாளில் மழையோ அல்லது போதிய அளவில் பாசன நீரோ கிடைக்காவிடில், பயிர் கருகிய வயல்களில் மறுவிதைப்பு செய்ய நேரிடும். அவ்வாறு செய்தாலும் அது அக்டோபர் மாத மழையில் சிக்கி அழிய நேரிடலாம் என்று விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com