கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 20 ஆண்டுகளாகத் தேடப்பட்டவர் கைது

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 20 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்தவர் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு (எஸ்.ஐ.டி.) போலீஸாரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.


கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 20 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்தவர் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு (எஸ்.ஐ.டி.) போலீஸாரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
கோவையில் கடந்த 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பல்வேறு பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 58 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 
மேலும் 250க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதுதொடர்பாக அல்-உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா, பொதுச் செயலாளர் அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மதானி உள்ளிட்ட 188 பேர் மீது போலீஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். 
இதில், நூகு, முஜிபூர் ரகுமான், டெய்லர் ராஜா ஆகிய மூவரைத் தவிர 185 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைதான சிலர் இறந்து விட்டனர். மேலும் சிலரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 17 பேர் மட்டுமே தற்போது சிறையில் உள்ளனர். 
இந்த வழக்கில் இருபது ஆண்டுகளாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சேர்ந்த என்.பி.நூகு என்கிற ரஷீத் என்கிற மன்காவு ரஷீத் (44) சென்னை விமான நிலையத்துக்கு வருவதாக சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸார் சென்னை விமான நிலையத்துக்கு வந்த நூகுவை திங்கள்கிழமை கைது செய்தனர். 
அவர் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில், சொந்த ஊர் திரும்புவதற்காக சென்னை விமான நிலையம் வந்தபோது பிடிபட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவைக்கு பலத்த பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை அவரை அழைத்து வந்தனர். பின்னர் கோவை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் (ஜே.எம்.5) ஆஜர்படுத்தினர். 
அப்போது அவரை செப்டம்பர் 24ஆம் தேதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்க குற்றவியல் நீதித் துறை நடுவர் இனியா கருணாகரன் உத்தரவிட்டார். 
இதையடுத்து கோவை மத்திய சிறையில் நூகு அடைக்கப்பட்டார். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முஜிபூர் ரகுமான், டெய்லர் ராஜா ஆகிய இருவர் இன்னமும் தலைமறைவாக உள்ளனர். நூகுவை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் மனுத் தாக்கல் செய்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com