பசுமைவழிச் சாலைத் திட்டத்துக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?: உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பசுமைவழிச் சாலைத் திட்டத்துக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?: உயர் நீதிமன்றம் கேள்வி


சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை - சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிராக பாதிக்கப்பட்ட நில உரிமையாளர் பி.வி.கிருஷ்ணமூர்த்தி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உள்பட பலர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிலத்தின் உரிமையாளர்களை அவர்களது நிலங்களிலிருந்து வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. 
மீண்டும் விசாரணை: இந்த வழக்குகள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் திட்டத்துக்காக சில இடங்களில் நிலங்கள் கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளதாகவும், மரங்களை வெட்டி வருவதாகவும் கூறி, அது தொடர்பான புகைப்படங்களைத் தாக்கல் செய்தனர்.
நீதிபதிகள் கண்டனம்: உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயல்படும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாகவும், கையகப்படுத்தப்படவிருக்கும் நிலங்களை அளவீடு செய்து சப்-டிவிஷன் (உள்பிரிவு) செய்யப்பட்டது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. 
ஏன் தடை கூடாது-நீதிபதிகள்: இந்த அறிக்கையைப் படித்து பார்த்து நீதிபதிகள் கூறியதாவது: உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்த போது, கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களை அளவீடு செய்யும் பணி மட்டுமே மேற்கொள்ளப்படும் என அரசுத் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், நிலங்களை அளவீடு செய்து சப்-டிவிஷன் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது சில உத்தரவாதங்களைக் கொடுத்து விட்டு, அதற்கு நேர்மாறாகச் செயல்படுவது ஏற்புடையது அல்ல. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் விருப்பம் போல் செயல்பட்டால், பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது'' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மனுதாரர்கள் புகார்: அப்போது, இந்தத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் உள்ள மரங்களை உடனடியாக வெட்டி எடுத்துச் செல்லவும், அதற்காக அதிக அளவில் பணம் கிடைக்கும் என அதிகாரிகள் தவறான தகவல்களைத் தெரிவித்து நில உரிமையாளர்களை நிர்பந்தம் செய்வதாகவும் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
மரங்களை வெட்டக் கூடாது-நீதிபதிகள்: அதிகாரிகளின் சொந்த நிலங்களாக இருந்தால், இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்வார்களா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதிகாரிகளுக்குச் சொந்தமான நிலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதுதான் அதன் பாதிப்பு தெரியும் என கருத்துத் தெரிவித்தனர். மேலும் இந்த திட்டத்துக்காக மரங்களை வெட்ட மாட்டோம் என அரசு அளித்துள்ள உத்தரவாதத்தை கட்டாயமாக செயல்படுத்த வேண்டும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு: இதைத் தொடர்ந்து சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்காக தமிழக அரசு நில அளவீடு செய்தது, ஏற்கெனவே நிலங்கள் கையகப்படுத்தியது தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த திட்டத்துக்காக மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு (செப்.14) ஒத்திவைத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com