பிரதமர் மோடியுடன் இலங்கை தமிழ் எம்பிக்கள் குழு சந்திப்பு: புதிய அரசியல் அமைப்புச் சட்டம் குறித்து விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கை தமிழ் எம்பிக்கள் குழுவினர் திங்கள்கிழமை இரவு சந்தித்தனர். 
தில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த இலங்கை தமிழ் எம்பிக்கள் குழு.
தில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த இலங்கை தமிழ் எம்பிக்கள் குழு.

பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கை தமிழ் எம்பிக்கள் குழுவினர் திங்கள்கிழமை இரவு சந்தித்தனர். 
அப்போது, புதிய அரசியல் அமைப்புச் சட்டம் மூலமே இலங்கை இனப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்பதால் அந்தச் சட்ட உருவாக்கத்தில் இந்தியா தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்திய அரசின் அழைப்புக்கிணங்க இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவர் கரு ஜயசூரிய தலைமையிலான பிரதிநிதிகள் குழு ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு வருகை தந்தது. 
இந்தக் குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். 
இவர்கள் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரைச் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்புகள் தொடர்பாக அமைச்சர் மனோ கணேசன் செவ்வாய்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
இலங்கையின் மலையகப் பகுதிகளில் இந்திய அரசு சார்பில் நடைபெற்று வரும் வீடமைப்புத் திட்டங்களுக்காக பிரதமர் மோடிக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டேன். இந்தத் திட்டங்கள் விரைந்து முடிக்கப்பட வேண்டும்; இது போன்ற புதிய திட்டங்களை இந்திய அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். இந்திய வம்சாவளி மக்கள் வாழும் மலையகப் பகுதியில் கூடுதலாகப் பள்ளிகளை உருவாக்க வேண்டும்.
இலங்கையில் இனப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை அமைக்கும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டு வருவது குறித்து இந்தியத் தலைவர்களுக்கு எடுத்துக் கூறினோம். புதிய அரசியல் அமைப்புச் சட்டம் மூலமே இலங்கை இனப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் எனக் கூறினோம். இலங்கையின் புதிய அரசியல் அமைப்புச் சட்ட உருவாக்கத்தில் இந்தியா தனது பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டோம்.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின்படி உருவாக்கப்பட்ட 13-ஆவது ஷரத்தில் திருத்தத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இலங்கை அரசுக்கு இந்திய அரசு போதுமான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். இக்கோரிக்கை தொடர்பாக சாதகமான முறையில் பரிசீலிப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தார். 
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச தில்லிக்கு திங்கள்கிழமை இரவு வருகை தந்துள்ளார். இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்னும் சில தினங்களில் தில்லி வருகை தரவுள்ளார். இவர்களிடம் இலங்கைத் தமிழ் மக்களுக்குரிய உரிமைகளை வழங்க வேண்டும் என இந்திய அரசு போதுமான அழுத்தத்தைத் கொடுக்க வேண்டும். இலங்கை தமிழ் மக்களின் பிரச்னைகளுக்கு மோடி தலைமையிலான அரசு தீர்வு காணும் என நம்புகிறேன். இந்த வகையில், மோடி தலைமையிலானஅரசு மீது நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை அமல்படுத்த அழுத்தம்
- இரா. சம்பந்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறுகையில், இலங்கையில் உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை விரைவில் அமல்படுத்த போதுமான அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தோம். இலங்கையில் இன்றைய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் சிறுபான்மைத் தமிழர்கள் தங்களை இலங்கையர்களாக உணர முடியவில்லை' என்றார்.

இலங்கை அகதிகள் நாடு திரும்பும் நடைமுறையை எளிமையாக்க வேண்டும்
- டக்ளஸ் தேவானந்தா

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கூறியதாவது: இலங்கையின் வடக்கு, கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசு சார்பில் ஒரு லட்சம் வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும்; இலங்கையில் தமிழர்கள் வாழும் வட மாகாணத்தில் பலாலி விமான நிலையத்தை இந்திய அரசு மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம்.மேலும், காங்கேசன்துறை துறைமுகத்தை இந்திய அரசு மேம்படுத்தினால் அது தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்பை அதிகரிக்கும் என பிரதமர் மோடியிடம் எடுத்துக் கூறினோம். 
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் இலங்கை திரும்புவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். தற்போது அந்த அகதிகள் 57 கிலோ எடையையே எடுத்துச் செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. இதை மாற்றி, அவர்களின் அசையாச் சொத்துகளையும் கப்பல்களில் எடுத்துச் செல்ல இந்திய அரசு உதவ வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். மேலும், இந்தியாவில் பல ஆண்டுகள் வசித்து விட்டு நாடு திரும்பும் இலங்கை அகதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டியது இந்திய அரசின் கடமை என மோடியிடம் தெரிவித்தோம். எங்களது கோரிக்கைகளை பரிசீலித்து முடிவெடுப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தார் என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com