ஜெயலலிதாவுக்கு 120 முறை முடநீக்கியல் சிகிச்சை அளிக்கப்பட்டது: சசிகலா தரப்பு வழக்குரைஞர் தகவல்
By DIN | Published on : 13th September 2018 01:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு 120 முறை முடநீக்கியல் சிகிச்சை அளிக்கப்பட்டதாக முடநீக்கியல் சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் மருத்துவர் ராஜ் பிரசன்னா விசாரணை ஆணையத்தில் தெரிவித்ததாக சசிகலா தரப்பு வழக்குரைஞர் அரவிந்தன் செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. விசாரணை ஆணையத்தில் சசிகலாவுக்கு எதிராக பிரமாணப் பத்திரம் அளித்தவர்கள், சாட்சியம் அளித்தவர்களிடம் அவரது வழக்குரைஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவரான விக்னேஷ், முடநீக்கியல் சிகிச்சைப் பிரிவின் துறைத் தலைவர் மருத்துவர் ராஜ் பிரசன்னா ஆகியோரிடம் ஆணையத் தரப்பு வழக்குரைஞர்கள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
120 முறை சிகிச்சை: இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா தரப்பு வழக்குரைஞர் அரவிந்தன் செய்தியாளர்களிடம் கூறியது:
முடநீக்கியல் மருத்துவர் ராஜ் பிரசன்னாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் ராஜ் பிரசன்னா, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, 59 நாள்களில் 120 முறை கை, கால்கள், மார்பகப் பகுதிகளில் அவருக்கு முடநீக்கியல் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் மூலம் நவம்பர் 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை 56 நிமிடம் ஜெயலலிதா சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்ததாக தெரிவித்தார்.
செயற்கை சுவாசக் கருவி: தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவரான விக்னேஷிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.
அதில் அவர், கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதிக்குப் பிறகு தேவைப்படும்போது இரவு நேரங்களில் சுமார் 5 மணி நேரம் வரையில் ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டதாக தெரிவித்தார் என்றார் வழக்குரைஞர் அரவிந்தன்.