பசுமை வழிச் சாலைத் திட்டத்தில் மாற்றம் என்பது ஏமாற்றும் வேலை: அன்புமணி
By DIN | Published on : 13th September 2018 03:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

சென்னை - சேலம் இடையிலான பசுமை வழிச் சாலைத் திட்டத்தில் மாற்றம் செய்வதாகக் கூறுவது ஏமாற்றும் வேலை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை - சேலம் இடையிலான பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்காக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தயாரித்துள்ள முன் சாத்தியக்கூறு அறிக்கை சுற்றுச்சூழல் அனுமதிக்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்தச் சாலையால் ஏற்படும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், திட்டத்துக்குத் தேவைப்படும் நிலங்களின் அளவு 2,791 ஹெக்டேரிலிருந்து 1,941 ஹெக்டேராகக் குறைக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 வழிச் சாலை அமைக்கப் போவதாக அறிவித்திருந்த நெடுஞ்சாலைகள் ஆணையம், முதல்கட்டமாக 6 வழிச்சாலை அமைத்துவிட்டு, அடுத்தகட்டமாக அதை விரிவுபடுத்திக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளது. அதற்காக 6 வழிச் சாலைக்கு மட்டும் நிலத்தைக் கையகப்படுத்தலாம். அதன் மூலம் மக்களின் கோபத்தை ஓரளவாவது கட்டுப்படுத்தலாம் என்பதுதான் அரசின் திட்டம்.
இந்த மாற்றத்தால் கையகப்படுத்தப்படும் நிலங்களின் அளவுதான் கால்வாசி குறைந்துள்ளதே தவிர, நிலங்களைப் பறி கொடுக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை குறையாது. எனவே, இதுவொரு ஏமாற்றும் திட்டமாகும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.