இன்று விநாயகர் சதுர்த்தி: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ்
இன்று விநாயகர் சதுர்த்தி: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி: ஓம் எனும் பிரணவ மந்திரத்தை தம் திருவுருவாய்க் கொண்ட விநாயகரின் திருஅவதார தினத்தில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து, அருகம்புல், எருக்கம்பூ, செம்பருத்திப்பூ, வில்வ இலை போன்றவற்றைக் கொண்டு பூஜை செய்து, அவருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல் போன்றவற்றை படையலிட்டு மக்கள் விநாயகர் சதுர்த்தி திருநாளை உற்சாகமாகக் கொண்டாடுவர். விநாயகப் பெருமானின் திருவருளால் மக்கள் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்ச்சி யுடன் வாழ வேண்டும்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்:
முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் சதுர்த்தி விழாவில் அனைவருக்கும் எல்லா நலன்களும், வளங்களும் கிடைக்க வேண்டும் என்றும் நமது நாடு உலகின் மகோன்னதமான முதல் நிலையை அடைய வேண்டும். 125 ஆண்டுகளுக்கு முன் மத வழிபாட்டுக்காக மட்டுமே பயன்படுத்தி வந்த விநாயகர் சதுர்த்தி விழாவை, 1893-ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரரும், அன்றைய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான பால கங்காதர திலகர் தேச பக்தியை உருவாக்கும் ஒரு தேசிய விழாவாக விநாயகர் பெருமானை வீதிகள்தோறும் வலம் வரச் செய்தார். வீடுகளில் இருந்த விநாயகரை மக்கள் தங்கள் கைகளாலேயே வீதியில் எடுத்துவரச் செய்து அனைவரையும் ஒன்றிணைத்து வழிபாடு செய்யவைத்தார். இந்த விழாவை தேசத்துக்காக அர்ப்பணித்த திலகருக்கு நமது நன்றிகளை காணிக்கையாக்குவோம்.
சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): முழுமுதற் கடவுளாகப் போற்றப்படும் விநாயகரின் பிறந்தநாள் விநாயகர் சதுர்த்தியாக நாடெங்கும் இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. எந்த செயலைச் செய்யத் தொடங்கினாலும், முதலில் விநாயகரை நினைத்து பூஜித்து, வணங்கிய பின் அந்தச் செயலைத் தொடங்கினால் அந்தச் செயல் எந்தத் தடங்கலுமின்றி நிறைவாக அமையும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விரதம் மேற்கொண்டு களிமண்ணால் அமைந்த விநாயகருக்கு கொழுக்கட்டை, அவல், பொரி முதலானவற்றை படைத்து, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அளித்து மகிழ்வுடன் இந்நாளை கொண்டாடுவர். விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்வில் வளமும், நலமும், விநாயகரின் அருளும் கிடைக்க உளமாற வாழ்த்துகிறேன்.
டிடிவி தினகரன் (அமமுக): சோதனைகளையும், இடையூறுகளையும் நீக்க வல்லவரான விநாயகரை வணங்கி மேற்கொள்ளும் எந்தச் செயலும் வெற்றியாகவே அமைந்திடும். இந்த நம்பிக்கையைக் கொண்டு விநாயகர் உருவத்தை இல்லத்தில் அலங்கரித்து வழிபட்டு மகிழ்வர். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இன்னல்கள் துயரங்கள் அத்தனையும் மறைந்து, செழிப்பும், மகிழ்ச்சியும் நம் இதயத்தில் நிலைத்திட இறைவனை வேண்டுவோம். வேண்டுவதை வழங்கும் யானை முக விநாயகர் அருளால், அனைவருக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைத்திட இல்லமெல்லாம் இன்பம் பெருகிட தடைகள் விலகி நல்வாழ்வு மலர்ந்திட, மகிழ்ச்சி என்றும் நிலைத்திட அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
இராம கோபாலன் (இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர்): தமிழகத்துக்கும் விநாயகருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. விநாயகர் சதுர்த்தி திருவிழாவை ஊர் திருவிழாவாக, தெரு விழாவாக மாற்றி இந்து சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தும் பணியை 34 ஆண்டுகளுக்கு முன் சிறிய அளவில் இந்து முன்னணி தொடங்கியது. தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான இடங்களில் விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு, சுமார் 30,000 ஊர்வலங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் நோக்கம், இந்து சமுதாயத்தில் எல்லாவித ஏற்றத்தாழ்வுகளையும் களைந்து சமுதாய ஒற்றுமை ஏற்பட வேண்டும்; இந்து சமய நம்பிக்கை வலிமை பெற வேண்டும் என்பதே. விநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com