நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த விவகாரம்: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த விவகார வழக்கில் மேற்கொள்ளப்பட்ட தினசரி விசாரணை குறித்த


முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த விவகார வழக்கில் மேற்கொள்ளப்பட்ட தினசரி விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் தாக்கல் செய்த மனு: கடந்த 2011-2016-இல் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்தபோது, அத்துறை திட்டங்களை உறவினர்கள் பி.சுப்பிரமணியம், சந்திரகாந்த் ராமலிங்கம், எஸ்.பி.கே. நாகராஜன், செய்யாத்துரை மற்றும் சேகர் ரெட்டி ஆகியோருக்கு வழங்கி ஆதாயம் அடையும் வகையில் செயல்பட்டுள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளாக அவரின் நெருங்கிய உறவினர்களுக்கு ரூ.4,833 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இப்புகார் மீது முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டு கடந்த ஆக.28-இல் விசாரணை தொடர்பான வரைவு அறிக்கை ஊழல் தடுப்பு ஆணையரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து... இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் கூடுதல் பதில் மனுவில், தமிழக முதல்வருக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். உயர்நீதிமன்றம் இதை நேரடியாக கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ, குறைந்த செலவில் செய்ய வேண்டிய பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வு செய்ததா? முதல்வருக்கு எதிரான இந்த புகாரின் பேரில் இறுதி வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஊழல் தடுப்பு ஆணையரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். தமிழக முதல்வர் மட்டுமின்றி துணை முதல்வர் மற்றும் இரண்டு அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் புகார்களின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.
நீதிபதி கேள்வி: இந்த விவகாரத்தில் முதல்வரின் உறவினர் நிறுவனங்களுக்கு ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதா, ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளை லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு செய்ததா என நீதிபதி
கேள்வி எழுப்பினார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இந்த விசாரணை தொடர்பான அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்தனர்.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், முதல்வரின் உறவினர் நிறுவனங்களுக்கு மட்டுமே ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. மேலும், எந்த ஒப்பந்தங்களிலும் ஒப்பந்தப்புள்ளியின் மதிப்பு உயர்த்தப்படவில்லை. குற்றஞ்சாட்டப்பட்டுள்ள எஸ்பிகே உள்ளிட்ட நிறுவனங்களுக்கு திமுக ஆட்சி காலத்திலும் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உலக வங்கியும் இதனைக் கண்காணித்து 6 மாதங்களுக்கு ஒருமுறை நிதியை வழங்கி வருகிறது. புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டு ஊழல் தடுப்பு ஆணையரிடம் மூடி முத்திரையிட்ட உறையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அவரது ஒப்புதலுக்குப் பின்னரே வழக்குப்பதிவு செய்வதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய முடியும் என்றார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தப் புகார் தொடர்பாக தினசரி மேற்கொண்ட விசாரணை குறித்த அறிக்கையை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் செப்டம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com