அதிமுக விதிகள் திருத்த விவகாரம்: எழுத்துப்பூர்வ பதிலை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

அதிமுக விதிகள் திருத்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் (ஓபிஎஸ்), எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்), சசிகலா ஆகியோர் தரப்பினர் தங்களது எழுத்துப்பூர்வ பதிலை
அதிமுக விதிகள் திருத்த விவகாரம்: எழுத்துப்பூர்வ பதிலை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

அதிமுக விதிகள் திருத்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் (ஓபிஎஸ்), எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்), சசிகலா ஆகியோர் தரப்பினர் தங்களது எழுத்துப்பூர்வ பதிலை மூன்று வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரத்தை நான்கு வாரங்களுக்குள் விசாரித்து முடிவு எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 
இது தொடர்பாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட கே.சி. பழனிச்சாமி தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர்களைக் கொண்டு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, 2017, செப்டம்பர் 12-ஆம் தேதி பொதுக்குழுவில் திருத்தப்பட்ட கட்சி விதிகளைத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் இருக்க உத்தரவிட வேண்டும். அதிமுகவிலிருந்து தன்னை நீக்கி கட்சித் தலைமை பிறப்பித்த உத்தரவு செல்லாது என அறிவிக்க வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.
இந்த மனு கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி தில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வி. காமேஸ்வர் ராவ் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அதிமுக விதிகள் திருத்தம் விவகாரம் தொடர்பாக கே.சி. பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவை இந்திய தேர்தல் ஆணையம் 4 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே, தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்படி கே. பழனிசாமி ஆகியோரது சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹிமா கோலி, ரேஹா பாலி ஆகியோர் அடங்கி அமர்வு முன் கடந்த மாதம் 21-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் கட்சியின் விதிகள் திருத்தம் குறித்து கேள்வி எழுப்ப அதிகாரம் இல்லை. அதிமுகவில் மேற்கொள்ளப்பட்ட கட்சி திருத்தங்களை தேர்தல் ஆணையமே அங்கீகரித்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணைய விசாரணை தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என்றனர்.
அப்போது, அதிமுக விதிகள் திருத்த விவகாரத்தில் தேர்தல் ஆணைய விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், விசாரணையின் முடிவுகளை தேர்தல் ஆணையம் செப்டம்பர் 13-ஆம் தேதி வரை வெளியிடக் கூடாது எனத் தெரிவித்து வழக்கு விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.
அதன்படி, வியாழக்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தரப்பிலும், எதிர்மனுதாரர்கள் கே.சி. பழனிச்சாமி, சசிகலா தரப்பிலும் வழக்குரைஞர்கள் ஆஜராகினர். 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என்றும், தங்கள் தரப்பு பதிலை எழுத்துப்பூர்வமாக தேர்தல் ஆணையத்தில் மூன்று வாரங்களுக்குள் மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் தாக்கல் செய்யவும், தேர்தல் ஆணையம் அந்த பதிலை விசாரித்து நான்கு வாரங்களுக்குள் முடிவெடுக்கவும் உத்தரவிட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com