ஆய்வாளர் சம்பத்திடம் இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை

குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக செங்குன்றம் காவல் ஆய்வாளராக இருந்த சம்பத்திடம் இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினர்

குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக செங்குன்றம் காவல் ஆய்வாளராக இருந்த சம்பத்திடம் இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினர். மேலும் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை இரு பைகளில் எடுத்துச் சென்றனர்.
 குட்கா முறைகேடு வழக்கில் கடந்த வாரம் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையை அடுத்து செங்குன்றம் கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உள்ளிட்டோரை சிபிஐ கைது செய்தது.
 அவர்களிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் ஏற்கெனவே குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலை சரிபார்த்து சம்மன் அனுப்பி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 இந்த வழக்கில் குற்றம்சாட்டப்படும், செங்குன்றம் சரக உதவி ஆணையராக இருந்த மன்னர் மன்னன், செங்குன்றம் காவல் ஆய்வாளராக இருந்த சம்பத் ஆகியோருக்கு சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்தனர்.
 அதைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் சம்பத் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.
 முறைகேடு நடைபெற்றதாகச் கூறப்படும் காலத்தில் செங்குன்றத்தில் இவர்தான் காவல் ஆய்வாளராக இருந்துள்ளார். அப்போது நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
 இந்நிலையில், காவல் ஆய்வாளர் சம்பத்திடம் இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்காக, நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் சனிக்கிழமை அவர் ஆஜரானார். இதையடுத்து, ராயபுரம் காவலர் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சம்பத்தை அழைத்து சென்று சோதனை மேற்கொண்டனர். அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இரு பைகளில் எடுத்துச் சென்றனர்.
 அதைத் தொடர்ந்து அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு மீண்டும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com