நீர், மின்சாரத்தை திராவிட மாநிலங்கள் பகிர்ந்து உதவ வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்

திராவிட மாநிலங்களிலுள்ள இயற்கை கொடைகளான மிகை நீரையும், மிகை மின்சாரத்தையும், உற்பத்தியாகும் உணவையும், மாநிலத்திற்கு மாநிலம் பகிர்ந்து உதவ வேண்டும் என
நீர், மின்சாரத்தை திராவிட மாநிலங்கள் பகிர்ந்து உதவ வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்

திராவிட மாநிலங்களிலுள்ள இயற்கை கொடைகளான மிகை நீரையும், மிகை மின்சாரத்தையும், உற்பத்தியாகும் உணவையும், மாநிலத்திற்கு மாநிலம் பகிர்ந்து உதவ வேண்டும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.
 சென்னையில் புனித பீட்டர் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின், திராவிட இயல் ஆய்வியல் நிறுவனத் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:
 இனமும், மொழியும் காக்கப்படுவதற்காக அண்ணா ஆற்றிய அரும்பணிகளைப் பற்றிய ஆய்வுகளை திராவிட இயல் ஆய்வியல் நிறுவனம் மேற்கொள்ள வேண்டும். அண்ணாவின் பொதுவாழ்வுக் காலத்தில், இளம் சமூகத்தினரிடம் இருந்த இனப்பற்றும், மொழிப்பற்றும் இன்றைக்கும் நிலவிட வேண்டும்.
 திராவிடக் கலாசாரம், பண்பாடு, மொழியின் வளம் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை இளைய தலைமுறையினரிடையே இந்த நிறுவனம் ஏற்படுத்த வேண்டும். அதற்காக அண்ணாவின் படைப்புகள் மற்றும் பெரியாரின் சமூக நீதிச் சிந்தனைகளை மாணவர்களிடையே பரப்ப வேண்டும்.
 மூத்த மொழி: திராவிட மொழிகளின் தாயகமாக விளங்குவது தமிழ் மொழி. தென்னிந்தியாவின் பிற திராவிட மொழிகளின் இலக்கியங்கள் கி.பி. 8- ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தோன்றியுள்ளன.
 ஆனால், தமிழ் இலக்கியத்துக்கு 30 நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட ஆதார வளம் உள்ளது. அத்தகைய பழைமையும், வளமையும் கொண்ட மொழி தமிழ் மொழி. தமிழ் மிகவும் மூத்த மொழி, முதன்மையான மொழி. எந்த மொழியின் துணை கொண்டும் இயங்காமல், தனிச் சொற்களைக் கொண்டு இயங்கக்கூடிய ஒரு தனி மொழி என்பதை ஆராய்ச்சி மூலம் நிரூபிக்க வேண்டிய கடமையும், அவசியமும் தமிழர்களுக்கு ஏற்பட்டது.
 ரிக் வேதத்திலேயே, திராவிட மொழிகளிலிருந்து பல சொற்கள் எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளன. இதிலிருந்து திராவிட மொழிகளின் தொன்மையும், பெருமையும் புலப்படுகிறது. மேலும், உலகில் மிகவும் பழைமையான நாகரிகமாகக் கருதப்படும் சிந்து சமவெளி நாகரிகமே திராவிட நாகரிகமாகும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
 நமது திராவிட மாநிலங்களிலுள்ள இயற்கை கொடைகளான மிகை நீரையும், மிகை மின்சாரத்தையும், உற்பத்தியாகின்ற உணவையும், மாநிலத்திற்கு மாநிலம் பகிர்ந்து உதவ வேண்டும் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
 இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, திராவிட இயல் ஆய்வியல் நிறுவனத்தின் இயக்குநர் ரபி பெர்னார்ட், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 சொற்குவை திட்டத்துக்கு ஆண்டுதோறும் ரூ.1 கோடி
 "அறிவியல் முன்னேற்றத்தால் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்பத்துக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு பல புதிய புதிய சொற்களை உருவாக்கினால்தான் தமிழின் சொல்வளத்தைக் காக்கவும், வளர்க்கவும் முடியும். இதைக் கருத்தில் கொண்டு, சட்டப் பேரவையில் கடந்த ஜூன் 28 -ஆம் தேதி சொற்குவை என்ற திட்டத்தை அறிவித்தேன்.
 இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்களை தொகுத்து, நிரல்படுத்தி, அவற்றை இணையதளம் வழியாக பொதுவெளியில் உலகெங்கும் உள்ள தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும், மொழியியல் ஆராய்ச்சியாளர்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வெளியிடப்படவுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் ரூ.1 கோடி தொடர் செலவினமாக தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது' என்று இந்நிகழ்ச்சியில் முதல்வர் கூறினார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com