புழல் சிறை விவகாரம் எதிரொலி: தமிழகம் முழுவதும் பல்வேறு சிறைகளில் போலீஸார் சோதனை

சென்னை புழல் சிறையில், விதிமுறைகளை மீறி சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வந்த 5 கைதிகள் வேறு சிறைகளுக்கு சனிக்கிழமை அதிரடியாக மாற்றப்பட்டனர்.
புழல் சிறை விவகாரம் எதிரொலி: தமிழகம் முழுவதும் பல்வேறு சிறைகளில் போலீஸார் சோதனை

சென்னை புழல் சிறையில், விதிமுறைகளை மீறி சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வந்த 5 கைதிகள் வேறு சிறைகளுக்கு சனிக்கிழமை அதிரடியாக மாற்றப்பட்டனர்.

தமிழகத்தில் உள்ள 10 மத்தியச் சிறைகளில் குறிப்பிட்ட சில கைதிகள் லஞ்சம் கொடுத்து சிறைக்குள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக புகார்கள் எழுந்தன. இந்தப் புகார்களுக்கு சிறைத் துறை சார்பில் அவ்வப்போது மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் மத்தியச் சிறைகளில் நடத்தப்பட்டு வந்த சோதனைகளில் செல்லிடப்பேசிகள், கஞ்சா பொட்டலங்கள், சிகரெட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட சில பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி புழல் சிறைக்குள் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு 7 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர். இதில் கள்ளநோட்டு, கள்ளத் துப்பாக்கி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஒரு நபரிடமிருந்தும், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஒரு நபரிடம் இருந்தும் 2 ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசிகளையும், ஒரு சாதாரண செல்லிடப்பேசியையும் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையில், புழல் மத்திய சிறையில் நடைபெறும் அத்துமீறல்கள் குறித்தும், குறிப்பிட்ட சில கைதிகளிடம் சிறைத் துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு அந்தத் கைதிகள் சொகுசாக வாழ்வதற்கு வசதிகள் செய்து கொடுப்பது குறித்தும் புகைப்படத்துடன் தினமணி நாளிதழில் கடந்த திங்கள்கிழமை (செப்.10) செய்தி வெளியானது.

இதைத் தொடர்ந்து, புழல் சிறையில் சிறைத் துறை கூடுதல் டிஜிபி அசுதோஷ் சுக்லா வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிறை வளாகத்தில் செல்லிடப்பேசிகள் மூலம் எடுக்கப்பட்ட கைதிகளின் சொகுசு வாழ்க்கை புகைப்படங்கள் தொடர்பாக விசாரணை நடத்தினார். புகைப்படங்களில் இடம்பெற்ற பகுதிகளை நேரில் பார்வையிட்டு உறுதிப்படுத்தினார். அத்துடன் சிறையின் "ஏ' பிரிவில் உள்ள குள்ள ரபீக், இலங்கை முகமது ரிகாஸ் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தினார்.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், சிறை அதிகாரி தர்மராஜ் தலைமையில் தண்டனை சிறைக் கைதிகள் அடைக்கப்பட்ட "ஏ' பிரிவில் வெள்ளிக்கிழமை சுமார் 5 மணி நேரம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதில் 20 தொலைக்காட்சிப் பெட்டிகள், 9 எப்.எம். ரேடியோக்கள், 4 மிக்ஸிகள், 4 பழச்சாறு பிழியும் கருவிகள், 27 கத்திகள், 40 லைட்டர்கள், 200 பாக்கெட் வெளிநாட்டு சிகரெட்டுகள், கஞ்சா பொட்டலங்கள், அரிசி, பருப்பு உள்ளிட்ட சமையல் பொருள்கள், 40-க்கும் மேற்பட்ட சமையல் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

5 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்: சிறையில் சொகுசு வாழ்க்கை நடத்திய கைதிகளாக அடையாளம் காணப்பட்ட 5 பேர் தமிழகத்தின் வெவ்வேறு சிறைகளுக்கு சனிக்கிழமை மாற்றம் செய்யப்பட்டனர். சிறையில் கடந்த 2017 அக்டோபர் முதல் கடுங்காவல் தண்டனை பெற்று வரும் கும்பகோணத்தைச் சேர்ந்த முகம்மது ரபீக் (30), கோவை மத்திய சிறைக்கும், திருவாரூர், புளிவலத்தைச் சேர்ந்த முகம்மது இப்ராஹிம் (எ) ராஜா (38), சேலம் மத்தியச் சிறைக்கும், 2016 நவம்பர் முதல் கடுங்காவல் தண்டனையில் புழல் சிறையில் இருந்துவரும் இலங்கை, கொழும்புவை சேர்ந்த முகம்மது ரிக்காஸ் (எ) ரிக்காஸ் (29) பாளையங்கோட்டை மத்தியச் சிறைக்கும், 2018 மார்ச் முதல் விசாரணை கைதியாக உள்ள சென்னை, மண்ணடியைச் சேர்ந்த முகம்மது ஜாகீர் (47) வேலூர் மத்தியச் சிறைக்கும் மாற்றம் செய்யப்பட்டனர். 

அதேபோல் 2017 ஜூன் முதல் விசாரணை கைதியாக உள்ள சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த ரபீக் (எ) நூருதீன் (28) திருச்சி மத்திய சிறைக்கும் மாற்றப்பட்டுள்ளார். இவர்கள் 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அச்சிறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

2-ஆவது நாள் சோதனை: 120 நாற்காலிகள், 500 ஆயத்த ஆடைகள் பறிமுதல் புழல் சிறையில் சனிக்கிழமை இரண்டாவது நாளாக சிறைக் காவலர்கள் நடத்திய சோதனையில் 120 நாற்காலிகள், 500 ஆயத்த ஆடைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

சிறையில் சனிக்கிழமை தண்டனை சிறைக் கைதிகளின் ஏ, பி, சி ஆகிய பிரிவுகளில் சுமார் 6 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. அதில் 120 நாற்காலிகள், 500 நவீன ஆயத்த ஆடைகள், 50 குஷன் படுக்கைகள், 50 படுக்கை விரிப்புகள், 50 அலங்கார திரைச்சீலைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இருப்பினும் 2-ஆவது நாள் சோதனையில் சிறையில் உள்ள உயர்பாதுகாப்புப் பிரிவில் சோதனை நடத்தப்படவில்லை என சிறைக் காவலர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சேலம், கடலூர் மற்றும் கோவை மத்திய சிறைகளில் 180-க்கும் மேற்பட்ட போலீஸார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், கடலூர் மத்திய சிறையில் சிம் கார்டு மற்றும் செல்போன் பேட்டரி பறிமுதல் செய்யப்பட்டது.

கோவையில் எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸார் சோதனை நடத்தினர். சேலத்தில் துணை ஆணையர் சுந்தர மூர்த்தி தலைமையில் 40 போலீஸாரும், கடலூரில் டிஎஸ்பி லாமேக் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாரும் சோதனை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com