மத்தியில் ஆட்சி மாற்றத்துக்குப் பாடுபடுவோம்: வைகோ

வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டாட்சித் தத்துவத்துக்கு வடிவம் கொடுக்கும் கூட்டணி ஆட்சி மத்தியில் அமையப் பாடுபடுவோம் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
மத்தியில் ஆட்சி மாற்றத்துக்குப் பாடுபடுவோம்: வைகோ

வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டாட்சித் தத்துவத்துக்கு வடிவம் கொடுக்கும் கூட்டணி ஆட்சி மத்தியில் அமையப் பாடுபடுவோம் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
 பெரியார் - அண்ணா பிறந்தநாள் விழா, மதிமுக வெள்ளி விழா, வைகோ பொதுவாழ்வு பொன்விழா என முப்பெரும் விழா ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் வைகோ மேலும் பேசியதாவது:
 கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் மாநில சுயாட்சி அதிகாரம் குறித்த குழு அமைக்க வேண்டுமென குரல் கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம்தான். அதைத் தொடர்ந்து 1974இல் தமிழக சட்டப் பேரவையில் மாநில சுயாட்சி குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தக் கோரிக்கை நீர்த்துப் போகாமல் அப்படியே இருக்கிறது.
 ஈழ விடுதலை உணர்வு எனது ரத்தத்தில் பரவிக்கிடக்கிறது. தனது பதவி ஏற்பு விழாவுக்கு ராஜபட்சவை நரேந்திர மோடி அழைத்தபோது, நெஞ்சில் கோடரியைப் பாய்ச்சியதைப் போல உணர்ந்தோம்.
 மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சித் தத்துவத்துக்கு வடிவம் கொடுக்கிற கூட்டணி ஆட்சியை மத்தியில் அமைக்க நாங்கள் துணை நிற்போம். தமிழகத்தில் திமுக ஆட்சி அமையப் பாடுபடுவோம் என்றார் வைகோ.
 இம்மாநாட்டில், காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா பேசியதாவது:
 நமது நாடு பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி தற்போது நடைபெறுகிறது. அதை முறியடித்தாக வேண்டும். நம்மை அழிக்க நினைப்பவர்களை முழுமையாக எதிர்க்கத் தவறினால் இந்தியா என்பதே இல்லாமல் போய்விடும் என்றார்.
 மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவப் படத்தை திமுக பொருளாளர் துரைமுருகன் திறந்து வைத்துப் பேசினார். தொடர்ந்து, வைகோ பொன் விழா மலரை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டார். தமிழ்தேச விடுதலை இயக்கத் தலைவர் தியாகு, தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், நடிகர் சத்யராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை அமைச்சர் ராமசாமி, எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி பாகவி உள்ளிட்டோர் பேசினர்.
 மாநாட்டில், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் தடுப்பணை கட்ட எச்சூழலிலும் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது, அணைப் பாதுகாப்பு வரைவு மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com