விரைவில் நிலக்கரி இறக்குமதி: மின்துறை அமைச்சர் தங்கமணி

மின்சார வாரியத்துக்கு வெளிநாட்டில் இருந்து விரைவில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
விரைவில் நிலக்கரி இறக்குமதி: மின்துறை அமைச்சர் தங்கமணி

மின்சார வாரியத்துக்கு வெளிநாட்டில் இருந்து விரைவில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
 வரும் 18 ஆம் தேதி மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து 16 வேகன்களில் (72,000 மெட்ரிக் டன்) நிலக்கரி வழங்க கோரிக்கை வைக்க உள்ளதாகவும், வெளிநாட்டில் இருந்தும் நிலக்கரி விரைவில் இறக்குமதி செய்யப்பட்டு, 15 நாள்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு என்ற இலக்கானது விரைவில் எட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
 நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
 மாநிலத்தில் மின் உற்பத்திக்கு தினந்தோறும் 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவையாக உள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 6 நாள்களுக்கு தேவையான நிலக்கரியும், மேட்டூர் மற்றும் வடசென்னை மின் நிலையங்களில் 3 நாள்களுக்கு தேவையான நிலக்கரியும் கையிருப்பில் உள்ளது. மத்திய அரசிடம் இருந்து தற்போது 12 வேகன்கள் நிலக்கரி வருகிறது.
 சூரிய மின்சக்தியில் இருந்து 4,000 மெகாவாட் கூடுதலாக மின் உற்பத்தி கிடைத்துள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொள்கலனில் ஏற்பட்ட பழுது விரைவில் நீக்கப்படும்.
 மேலும், 500 மெகாவாட் உபரி மின்சாரம் நமக்கு கிடைக்கிறது. ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் 16,000 மெகாவாட் மின் உற்பத்தி உள்ளது.
 தனியார்மயமாக்கப்படாது: தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாருக்கு அளிக்கும் திட்டம் இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானது.
 நாங்குனேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு மின்சாரம் விநியோகம் செய்ய தனியாருக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 இதனை எதிர்த்து புது தில்லியில் உள்ள தேசிய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மேல்முறையீடு செய்வோம்.
 தமிழ்நாடு மின்சார வாரியம் எப்போதும் தனியார்மயமாக்கப்படாது என்றார் அமைச்சர் தங்கமணி.
 தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்ய அனுமதி கோரிக்கை: இதனிடையே மாநிலத்தின் மின்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான அனுமதியை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழக மின்வாரியம் கோரியுள்ளது.
 தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு மொத்தம் 4,320 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் வழக்கமாக நாள்தோறும் 3,500 மெகாவாட் மின்சாரமும், கோடையில் அதிகபட்சமாக 4,000 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தியாகிறது.
 காற்றாலை மின்சாரம் குறைந்தது: மாநிலத்தின் மின் தேவை மற்றும் உற்பத்தி ஆகியவற்றை கணக்கில் வைத்து மே மாதம் முதல் நாள்தோறும் சராசரியாக 3,000 மெகா வாட்டுக்கும் அதிகமாக காற்றாலை மின்சாரம் கிடைத்தது. இதனால், அனல் மின் உற்பத்தியை மின்சார வாரியம் கணிசமாகக் குறைத்தது. தற்போது தென்மேற்கு பருவ காற்று குறைந்ததால், காற்றாலை மின்சார உற்பத்தி இம்மாதம் குறையத் தொடங்கி தற்போது 400 மெகாவாட் அளவுக்கு கிடைக்கிறது.
 நிலக்கரி தட்டுப்பாடு: அதே நேரத்தில், கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகரித்துள்ளதால், மின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால், அனல் மின்நிலையங்கள் மூலம் உற்பத்தியை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு மின்சார வாரியம் தள்ளப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஒடிஸா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் இருந்து, தமிழகத்துக்கு வரும் நிலக்கரி வரத்து போதுமானதாக இல்லை. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அனல் மின்நிலையங்களில் இருந்து முழுமையான மின்சாரத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 மத்திய தொகுப்பில் குறைவான மின்சாரம்: மத்திய தொகுப்பில் இருந்து வழக்கமாக தமிழகத்துக்கு நாள்தோறும் 6,138 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் அதில் 2,500 மெகாவாட் மின்சாரம், குறைவாகவே கிடைக்கிறது.
 இந்நிலையில், மின்தட்டுப்பாட்டை சமாளிக்க தனியார் நிறுவனங்களிடம் இருந்து சுமார் 1,500 மெகாவாட் வரை மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சார வாரியம் முடிவு செய்து, அதற்கான அனுமதியை கோரியுள்ளது. அக்டோபர் முதல் 2019 மே மாதம் வரை நாள்தோறும் 1,500 மெகாவாட் அளவுக்கு தனியாரிடம் மின்சாரம் வாங்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. குறுகிய கால அடிப்படையில் அவசரத் தேவைக்கு தனியாரிடம் இருந்து 1 யூனிட் மின்சாரம் ரூ.5 }க்கும் குறைவாகவே வாங்கப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆணையம் ஒப்புதல் தரும் அளவு மற்றும் விலைக்கு ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு அதன் அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என்றனர் அதிகாரிகள்.
 மின்வெட்டு ஏற்படாது
 தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளதால், மின்வெட்டு ஏற்படாது. மின்வெட்டும் இல்லை, மின் தட்டுப்பாடு வரப்போவதுமில்லை. எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும், டி.டி.வி. தினகரனும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் மின்வெட்டு வரப்போகிறது என்று பேசி வருகின்றனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போதே தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றிட திட்டங்களை வகுத்து நிறைவேற்றினார். இந்திய சமன்பாட்டு அறிக்கையில் கூட தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com