பின்புறம் அமர்பவர்களுக்கும் தலைக்கவசம் கட்டாயம்! உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்!

இரு சக்கர வாகனங்களின் பின்புறம் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்துவது தொடர்பான வழக்கில்
பின்புறம் அமர்பவர்களுக்கும் தலைக்கவசம் கட்டாயம்! உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்!


இரு சக்கர வாகனங்களின் பின்புறம் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்துவது தொடர்பான வழக்கில் அரசுத் தரப்பு அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்றம், இவ்வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிப்பதாக தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், வாகன ஓட்டிகள் தலைக் கவசம், சீட் பெல்ட் அணியாத காரணங்களால்தான் 70 முதல் 90 சதவீத விபத்துகள் ஏற்படுகின்றன. தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டதால் அண்மைக்காலமாக உயிரிழப்புகள் குறைந்துள்ளன. 
தலைக்கவசம் அணிவதால் கடந்த 2016-இல் 4 ஆயிரத்து 91-ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை, கடந்த 2017-இல் 2 ஆயிரத்து 956-ஆகக் குறைந்துள்ளது. எனவே, இரு சக்கர வாகனங்களின் பின்புறம் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் அணிவதையும், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிவதையும் கட்டாயமாக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இரு சக்கர வாகனங்களின் பின்புறம் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்பது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக காவல் துறை டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல்: இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.ஹெச். அரவிந்த் பாண்டியன், டிஜிபி சார்பில் தலைக்கவசம் அணியாதவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்தார்.
அறிக்கையைப் படித்துப் பார்த்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் வியாழக்கிழமை (செப். 20) தீர்ப்பளிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com