ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம்: அரசு முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் குறவன், குறத்தி என்ற பெயரில் நடைபெறும் ஆபாச நடனத்துக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசின் முதன்மைச் செயலர்
ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம்: அரசு முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவு


தமிழகத்தில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் குறவன், குறத்தி என்ற பெயரில் நடைபெறும் ஆபாச நடனத்துக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசின் முதன்மைச் செயலர், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறைச் செயலர் ஆகியோர் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த இரணியன் தாக்கல் செய்த மனு: வனவேங்கை பேரவையின் மாநில பொதுச் செயலராக உள்ளேன். தமிழகத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான குறவர், பழங்குடி சமூக மக்கள் வாழ்ந்து வருகிறோம். இந்து குறவன், சித்தனார் என்று தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலும், மலைக்குறவர், வேடன், வேடுவர் என்று பழங்குடியினர் பட்டியலிலும் உள்ளோம்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் திருவிழா காலங்களில் நடத்தப்படும் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் எங்கள் சமூகத்தின் பெயரான குறவன், குறத்தி நடனம் என்று பெயரிடப்பட்டு ஆபாச நடனம் ஆடப்படுகிறது. மேலும் இந்த ஆபாச நடனக் காட்சிகளை இணையதளத்திலும் பதிவேற்றம் செய்து எங்களது சமூகத்தின் பெயரை இழிவுபடுத்தி வருகின்றனர். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை அனுமதியோடு, இந்த நடன நிகழ்ச்சி நடக்கிறது. எங்களை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் இச்செயல் நடக்கிறது. 
எனவே இணையதளத்தில் குறவன், குறத்தி என்ற பெயரில் உள்ள ஆபாச நடனங்களை நீக்க உத்தரவிட வேண்டும். ஆபாச நடனமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த ஆபாச நடனத்துக்கு காவல்துறையினர் அனுமதியளிக்கக் கூடாது. அத்துடன் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு தமிழக முதன்மைச் செயலர், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறைச் செயலர் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com