கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை

இலங்கைத் தலைநகரில் உள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா வரும் சனிக்கிழமை (செப்.29) நடைபெற உள்ளது.

இலங்கைத் தலைநகரில் உள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா வரும் சனிக்கிழமை (செப்.29) நடைபெறுகிறது.

இலங்கையில் உள்ள 76 ஆண்டுக் கால பாரம்பரியம் மிக்க கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சிலை, தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் ஆயிரம் கிலோ எடையில் மூன்றரை அடி உயரத்தில், கன்னியாகுமரி மயிலாடியில் உள்ள நல்லதாணு சிற்பக்கூடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் சிலை திறப்பு விழா கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் வரும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

பங்கேற்போர்

இதில், சிறப்பு அழைப்பாளராக தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பங்கேற்று சிலையைத் திறந்துவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்ப் பல்கலைக் கழக அயல்நாட்டு தமிழ்க் கல்வித் துறைத் தலைவர் இரா. குறிஞ்சிவேந்தன்,  வழக்குரைஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்,  கவிஞர் இளையபாரதி, தமிழ்த்தாய் அறக்கட்டளை பொதுச் செயலாளர் உடையார்கோயில் குணா,  முனைவர் வி. முத்து,  கவிஞர் துரை. இராசமாணிக்கம்,  நாவை. சிவம்,  கொழும்புத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் கு. இராஜகுலேந்திரா, க. உதயகுமார்,  தம்பு. சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

இந்த நிகழ்ச்சியுடன் திருக்குறள் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது.  இதில், இந்திய - இலங்கை வாழ் பேராசிரியர்களும்,  தமிழறிஞர்களும் கலந்துகொண்டு கட்டுரை வாசிக்கின்றனர்.  

இந்த விழாவையொட்டி, இலங்கை நாடாளுமன்றத் தமிழ் உறுப்பினர்களுடனான சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிகளுக்கு  நாடாளுமன்ற உறுப்பினர் மாவே. சேனாதிராஜா ஏற்பாடு செய்துள்ளார்.

முன்னதாக, யாழ்ப்பாண பல்கலைக் கழகம், வவுனியா,  திருகோணமலை போன்ற இடங்களுக்கு தமிழ் இலக்கியப் பயணம் மேற்கொள்கின்றனர். தொடர்ந்து, யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்களிடையே தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் உரையாற்றுகிறார்.

இதுதவிர,   பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.  இந்நிகழ்வுகளில் பங்கேற்க இந்தியாவிலிருந்து தமிழறிஞர்களும், தமிழ் அமைப்பினரும், பேராசிரியர்களும், மாணவர்களும் இலங்கை செல்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com