போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா மயங்கி விழுந்தது உறுதியாகிறது: மனோஜ் பாண்டியன்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா மயங்கி விழுந்தது உறுதியாகிறது: மனோஜ் பாண்டியன்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதில் அப்பல்லோ தலைமை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன், மருத்துவர்கள் வெங்கட்ராமன், பத்மாவதி, புவனேஸ்வரி ஷங்கர் மற்றும் அருட்செல்வன் உள்ளிட்டோர் செவ்வாய்கிழமை ஆஜரானார்கள். அப்போது அப்பல்லோவில் சிசிடிவி காட்சிகள் 30 நாட்களுக்குப் பின்னர் அழிந்துவிடும் என்று சுப்பையா வாக்குமூலம் அளித்தார்.

அவரிடம், சிகிச்சையின் போது பதிவான சிசிடிவி காட்சிகள், அப்பல்லோ வெளியிட்ட மருத்துவ அறிக்கைகள் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. இதில் பலதரப்பு கருத்துக்களுக்கு இடையிலான முரண்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதில் அப்பல்லோ தலைமை செயல் அதிகாரி அளித்த வாக்குமூலம் தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு அப்பல்லோவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டது. 

மேலும், அதிமுக முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், குறுக்கு விசாரணை நடத்தினார்.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரான பின் முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

போயஸ்கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா மயங்கி விழுந்தார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. அவர் மயங்கி விழுந்தது தொடர்பாக போயஸ் கார்டனில் இருந்த 2 பணிப்பெண்களிடம் ஏன் விசாரிக்கவில்லை? மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது சுயநினைவு இல்லை. மயங்கிய நிலையில் தான் அப்பல்லோ அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

போயஸ் கார்டனில் சிசிடிவி பதிவுகள் அழிக்கப்பட்டதாகக் கூறுவது பொய்யான தகவல். அப்பல்லோ மருத்துவமனையில் அவரை வேறு வார்டுக்கு மாற்றும் போதும் சிசிடிவி அணைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது, அவரது உடலில் காயங்கள் இல்லை என இன்று ஆஜரான மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சில போலீஸ் அதிகாரிகள் உண்மையை மறைத்து சாட்சி கூறியுள்ளனர். ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்க யாரையும் சசிகலா ஏன் அனுமதிக்கவில்லை. ஆறுமுகசாமி ஆணையத்தில் அளிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குமூலங்களிலும் முரண்பாடுகள் உள்ளன. ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் நீங்க வேண்டும். ஆறுமுகசாமி ஆணையத்தின் முடிவு நல்ல முடிவாக இருக்கும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com