திருநாரையூரில் மிகவும் குறைந்தளவு நீருடன் காணப்படும் பாசன வாய்க்கால்.
திருநாரையூரில் மிகவும் குறைந்தளவு நீருடன் காணப்படும் பாசன வாய்க்கால்.

பாசனத்துக்கு நீரின்றி தவிக்கும் டெல்டா விவசாயிகள்!

கடலூர் மாவட்ட டெல்டா பகுதிகளில் பாசனத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்ட டெல்டா பகுதிகளில் பாசனத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் கடலூர் மாவட்டமும் ஒன்று. காவிரி ஆற்றின் கிளை ஆறான கொள்ளிடத்தில் அணைக்கரையின் குறுக்கே கட்டப்பட்ட கீழணையில் தண்ணீர் தேக்கப்படுகிறது. இந்த அணையின் மூலம் கடலூர் மாவட்டத்தில் வடவாறு பாசன வாய்க்கால், வீராணம் ஏரி, வடக்கு ராஜன் வாய்க்கால், கஞ்சன்கொல்லை வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால், பாசிமுத்தான் ஓடை, விநாயகன்தெரு வாய்க்கால் ஆகியவை மூலம் சுமார் 1.06 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கும், தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் வட்டத்தில் 1,500 ஏக்கர் விளைநிலங்களுக்கும், நாகை மாவட்டத்தில் தெற்குராஜன் வாய்க்கால், கீழராமன், மேலராமன் ஆகிய வாய்க்கால்கள் மூலம் 22,408 ஏக்கர் விளைநிலங்களுக்கும் பாசன நீர் விநியோகிக்கப்பட வேண்டும்.
நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை கூடுதலாகப் பெய்ததால், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியது. இருப்பினும், பாதுகாப்பு கருதி கடந்த ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை அதிகபட்சமாக விநாடிக்கு 38 ஆயிரம் கன அடி தண்ணீரும், குறைந்தபட்சமாக 577 கன அடி தண்ணீரும் கொள்ளிடம் ஆற்றின் வழியாக வெளியேற்றப்பட்டது.
ஆகஸ்ட் 13 முதல் 23-ஆம் தேதி வரையிலான 11 நாள்களில் அதிகபட்சமாக 2,25,130 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. குறிப்பாக, 22-ஆம் தேதி மாலை மேட்டூரிலிருந்து 90 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதில், விநாடிக்கு 32 ஆயிரம் கன அடி தண்ணீர் மேலணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், மேலணையில் நீர்ப்போக்கி மதகுகள் உடைந்ததால், காவிரி ஆற்றிலிருந்து மொத்த பாசன நீரும் கொள்ளிடத்தின் வழியாக வெளியேற்றப்பட்டது. மேலணை உடைப்பை சரி செய்யும் பணியின் காரணமாக, காவிரி நீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாகக் கடலுக்குச் சென்றது. ஆனால், தற்போது கடலூர் மாவட்டத்தில் டெல்டா பாசனத்துக்கு போதிய நீர் வழங்கப்படவில்லை என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலர் பெ.ரவீந்திரன் கூறியதாவது:
அதிக அளவு தண்ணீர் வந்த காலகட்டத்தில் கீழணை வழியாக வீராணம், வாலாஜா, பெருமாள் ஆகிய ஏரிகளில் முழுக் கொள்ளளவுக்கு தண்ணீரை தேக்கிய பொதுப்பணித் துறை அதிகாரிகள், சாகுபடிக்கு உரிய தண்ணீரை கொடுக்க முடியாமல் தற்போது திணறுகிறார்கள்.
மேலணையில் சேதமடைந்த பகுதிகள் வழியாக வெளியேறும் தண்ணீரை தடுக்கும் பணி நிறைவடைந்த பிறகு, மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் 20 ஆயிரம் கன அடிக்கு மேல் கல்லணைக்கு வந்து சேரும் நிலையில், கீழணைக்கு 10 சதவீத பங்கின் அடிப்படையில் தண்ணீர் தர மறுக்கும் திருச்சி மண்டல பொதுப்பணித் துறை அதிகாரிகளின் செயல் கண்டனத்துக்குரியது. கல்லணையிலிருந்து விநாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதாக திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 500 கன அடிக்கும் குறைவாகவே கீழணைக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி பருவத்துக்கேற்ப நேரடி நெல் விதைப்பு செய்தனர். இதில், ஆரம்ப காலகட்டத்தில் கிடைத்த நீரைக் கொண்டு முளைத்த பயிர்கள் தற்போது கருகத் தொடங்கியுள்ளன. இந்தப் பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் டீசல் என்ஜின்கள் மூலம் தண்ணீரை இறைத்து பயன்படுத்தி வருகின்றனர். அதேநேரத்தில், கடைமடை பாசனப் பகுதிகளில் விவசாயிகள் தண்ணீருக்காக காத்திருக்கின்றனர்.
செப்டம்பர் மாதத்தில் நாற்றங்கால் பணியை தொடங்கினால்தான் அக்டோபர் மாத மத்தியில் நடவுப் பணிகளை மேற்கொண்டு, அவற்றை வளர்த்து வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படாமல் காப்பாற்ற முடியும். மேலும், ஜனவரி மாதம் அறுவடை முடித்து ஊடுபயிர்களை சாகுபடி செய்து கூடுதல் வருவாய் பெற முடியும். நிகழாண்டு அதற்கான வாய்ப்பு உருவான நிலையில், பொதுப் பணித் துறையினர் உரிய காலத்தில் தண்ணீரை கேட்டு பெற்று விநியோகிக்கத் தவறிவிட்டனர். இதனால், தண்ணீருக்காகப் போராட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com