வறட்சியிலிருந்து பயிர்களை காக்க...!

கோடை காலத்தில் வறட்சியால் நிலவும் நீர்ப் பற்றாக்குறையிலிருந்து பயிர்களைப் பாதுகாக்க,  தருமபுரி மாவட்டம்,  பாப்பாரப்பட்டி
வறட்சியிலிருந்து பயிர்களை காக்க...!
Updated on
1 min read



தருமபுரி:  கோடை காலத்தில் வறட்சியால் நிலவும் நீர்ப் பற்றாக்குறையிலிருந்து பயிர்களைப் பாதுகாக்க,  தருமபுரி மாவட்டம்,  பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் ம.சங்கீதா,  ப.அய்யாதுரை, பா.ச.சண்முகம் ஆகியோர் கூறும் தொழில்நுட்ப வழிமுறைகள்:
விவசாயிகள் தற்போது  சாகுபடி செய்துள்ள ராகி,  நிலக்கடலை, மக்காச் சோளம்,  கரும்பு ஆகிய பயிர்கள் பாசன நீர்ப் பற்றாக்குறை மற்றும் வறட்சியினால் பாதிக்கப்பட்டு பயிர்கள் காய்ந்து, வாட்டத்துடன் காணப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில், பயிர்கள் முற்றிலும் காய்ந்து விடாமல் வறட்சியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க,  திரவ மெத்தைலோ பாக்டீரியம் (பி.பி.எப்.எம்.)  நுண்ணுயிர் உரம் 0.1 சதம் கரைசலை அதாவது 10 மி.லி.  திரவ நுண்ணுயிர் உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் பயிர்களின் மீது நன்றாகப் படும் வகையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.  
இவ்வாறு 15 நாள்கள் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை பயிரின் வளர்ச்சிக் காலத்தில் தெளிப்பதன் மூலம் பயிர்களை வறட்சியினால் காய்ந்து விடாமல் ஒரு வார காலத்துக்கு உயிரோட்டத்துடன் வைத்திருக்க முடியும்.  இவை பயிர்களின் இலையின் மேற்பரப்பில் ஆஸ்மோபுரடெக்டன்ஸ் எனப்படும் சர்க்கரை,  அமினோ அமிலங்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்வதன் வாயிலாக பயிர்களை கடும் வறட்சி மற்றும் அதிக வெப்பத்தின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது.  மேலும், இந்த நுண்ணுயிர் உரத்தை தெளிப்பதால் பயிர்களின் இலைப் பரப்பு,  இலைத் துளைகளின் எண்ணிக்கை,  பச்சையம் அல்லது குளோரோபில் நிறமியின் செரிவு ஆகியவற்றை அதிகரிப்பதன் வாயிலாக ஒளிச் சேர்க்கையை அதிகப்படுத்தி, மகசூலை 10 சதம் வரை அதிகரிக்கிறது.
இந்த நுண்ணுயிர் உரத்தை அனைத்து வகைப் பயிர்களுக்கும் உபயோகப்படுத்தலாம்.  இதனை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளுடன் கலந்து பயன்படுத்தக் கூடாது. நுண்ணுயிர் உரம் கிடைக்காத பட்சத்தில் பொட்டாசியம் குளோரைடு 0.5 சதவீத கரைசலை அதாவது 50 கிராம் மியுரேட் ஆப் பொட்டாஷ் உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து, பயிர்களின் மீது நன்றாகப் படும் வகையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.  இந்த பொட்டாஷ்  உரத்திலிருந்து பயிருக்குக் கிடைக்கக்கூடிய சாம்பல் சத்தானது பயிர்களின் இலைப் பரப்பிலுள்ள இலைத் துளைகளின் செயல்பாட்டினை ஒருங்கிணைப்பதன் மூலமாக பயிர்களிலிருந்து நீராவியாதலைக் கட்டுப்படுத்தி, பயிர்கள் வறட்சியினால் காய்ந்து விடாமல் உயிரோட்டத்துடன் இருக்க உதவுகிறது.
எனவே, விவசாயிகள் இத்தகைய வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் பயிர்களை வறட்சியின் பாதிப்பிலிருந்து காப்பாற்றி அதிக மகசூல் பெறலாம் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com