
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆபாச வீடியோ எடுத்து பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றி தமிழக அரசு இரண்டு நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டது.
இதையடுத்து பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் பொள்ளாச்சியில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆபாச வீடியோ எடுத்து பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத் தலைவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், அந்த பெண் அலறிய குரலை நினைத்துப் பார்க்கும்போது மனம் பதறுகிறது. பயம், தவிப்பு கலந்த அந்த பெண்ணின் குரல் என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. வழக்கை விசாரிக்கும் எஸ்.பி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை தவறுதலாக சொல்லிவிட்டாரா? பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது எப்படி? உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட எஸ்.பி மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. அவமானத்தை எப்படி துடைக்கப்போறீங்க சாமி? இன்னும் ஏன் காத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளனர்.
இதையடுத்து குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை அரசு மீதான நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.