பொள்ளாச்சி கொடூரம்: குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் சிபிசிஐடி சோதனை

பொள்ளாச்சி ஆபாச விடியோ விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டு கைதானவர்களின் வீடுகளில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
பொள்ளாச்சி கொடூரம்: குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் சிபிசிஐடி சோதனை
Published on
Updated on
1 min read


பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆபாச விடியோ விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டு கைதானவர்களின் வீடுகளில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

ஆபாச விடியோ வழக்கில் முக்கியக் குற்றவாளி திருநாவுக்கரசு வீட்டில் நேற்று சோதனை நடத்தப்பட்ட நிலையில், இன்று சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோர் வீடுகளில் இன்று சிபிசிஐடி காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம், நகைகளைப் பறித்த கும்பல் தொடர்பான வழக்குக்குத் தொடர்பான ஆவணங்களோ, சாட்சியங்களோ ஏதேனும் வீட்டில் இருக்குமா என்ற அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் பொள்ளாச்சியில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆபாச விடியோ எடுத்து பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றி தமிழக அரசு இரண்டு நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டது. 

இந்நிலையில்,  சிபிசிஐடி ஐ.ஜி. ஸ்ரீதர், எஸ்.பி. நிஷா பார்த்திபன் தலைமையிலான குழுவினர் ஆனைமலை அருகே சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் வீட்டை புதன்கிழமை மாலை ஆய்வுசெய்தனர். தொடர்ந்து பல இடங்களில் ரகசிய ஆய்வும், விசாரணையும் நடத்தியதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில்,  பாலியல் வழக்கில் முக்கிய எதிரியாக கூறப்படும் திருநாவுக்கரசின் மாக்கினாம்பட்டியில் உள்ள வீட்டில் சிபிசிஐடி எஸ்.பி. நிஷா பார்த்திபன் தலைமையில் டிஎஸ்பி முத்துசாமி, 2 பெண் ஆய்வாளர்கள், 2 எஸ்.ஐ.கள்,  கிராம நிர்வாக அலுவலர் அடங்கிய குழுவினர் வியாழக்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டனர். 

திருநாவுக்கரசின் தாய் லதா, பாட்டி, பெரியம்மா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தி வழக்கு விசாரணைக்கு உதவக்கூடிய ஆவணங்கள், செல்லிடப்பேசிகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர்.  இந்தச் சோதனை சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. திருநாவுக்கரசின் வீட்டில் சோதனை நடைபெற்றபோது வீட்டிலிருந்து 50 மீட்டர் சுற்றளவுக்கு பொதுமக்கள் நடமாட போலீஸார் தடை விதித்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com