முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்துப் பேசினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், மூத்த நிர்வாகிகள் விடியல் சேகர் உள்ளிட்டோர், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர். மக்களவைத் தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இருதரப்பினரும் ஆலோசித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் ஒருவரையொருவர் சந்தித்து வருகின்றனர். கூட்டணியில் இணைந்த கட்சித் தலைவர்களுக்கு ,முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி , தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் விருந்து அளித்து வருகிறார். அந்த வகையில், அண்மையில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு, தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.