சுடச்சுட

  

  ஆண்டுதோறும் முதுகுத் தண்டுவட பாதிப்புடன் 25 ஆயிரம் குழந்தைகள் பிறப்பு

  By DIN  |   Published on : 03rd April 2019 03:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 25 ஆயிரம் குழந்தைகள் முதுகுத்தண்டு வளர்ச்சி குறைபாடுடன் பிறக்கின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் உதவியால் அந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
  பிறவி முதுகுத் தண்டுவட குறைபாடு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் முதுகுத் தண்டுவட சிகிச்சைப் பிரிவு இயக்குநர் டாக்டர் கே. ஸ்ரீதர், அதுதொடர்பாக கூறியதாவது:
  கருவுற்ற தாய்மார்கள், சிசுவின் வளர்ச்சிக்காகவும், ஆரோக்கியத்துக்காகவும் பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். சிசுவின் முதுகுத் தண்டுவடம், நரம்புகளில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக ஃபோலிக் ஆசிட் போன்ற மருந்துகளையும் உட்கொள்கின்றனர்.
  இருப்பினும், சிலருக்கு அத்தகைய பாதிப்புகளுடனேயே குழந்தைகள் பிறக்கின்றன. சர்வதேச ஆய்வுத் தகவல்களின்படி, ஆயிரம் குழந்தைகளில் 8 குழந்தைகள் முதுகுத் தண்டுவட பாதிப்புடன் பிறப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்ப்ப காலத்தின்போது முதுகுத் தண்டுவடம் முறையாக வளர்ச்சி பெறாததன் காரணமாக சில இடங்களில் பிளவு ஏற்பட்டுவிடும். அதுபோன்ற குழந்தைகள், பிறந்த பிறகு உடலளவில் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்கின்றன.
  இந்தியாவில் ஆண்டுதோறும் 25 ஆயிரம் குழந்தைகள் முதுகுத் தண்டுவட பாதிப்புடன் பிறப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது உள்ள அதிநவீன சிகிச்சைகள் மூலம் கருவிலேயே அப்பிரச்னைகளை சரிசெய்யலாம். கருமுனை நரம்பியல் அறுவை சிகிச்சை என அது அழைக்கப்படுகிறது. தாயின் கர்ப்பப் பையில் உள்ள சிசுவின் வளர்ச்சி சரியாக இல்லையெனில், அந்த வகையான சிகிச்சைகளை அளிக்கலாம். கருமுனை நரம்பியல் சிகிச்சை மையங்கள் அமைந்துள்ள ஒருசில மருத்துவமனைகளில் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையும் ஒன்று என்றார் அவர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai