சட்ட விரோத நடவடிக்கை: காவல் ஆய்வாளருக்கு ரூ.50,000 அபராதம்

திருச்சியில் ஆன்லைன் வர்த்தக மைய உரிமையாளரை சட்டவிரோதமாக காவல் நிலையத்தில் வைத்து தாக்கியது தொடர்பாக காவல் ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து, மாநில மனித உரிமை


திருச்சியில் ஆன்லைன் வர்த்தக மைய உரிமையாளரை சட்டவிரோதமாக காவல் நிலையத்தில் வைத்து தாக்கியது தொடர்பாக காவல் ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
திருச்சி குமரன் நகரைச் சேர்ந்த ஞானவேல் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: எனது ஆன்லைன் வர்த்தக மையத்தில் பயிற்சி  பெற்ற பி.எஸ்.மனோகர் என்பவர், ஒரு பெருநிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ. 1 லட்சத்தை அவர் இழந்தார். அந்தத் தொகையை எங்களிடம் மிரட்டி வசூலிக்கும் நோக்கில் எனது நிறுவன பயிற்சியாளர் பிரியங்கா மீது திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் பொய்ப் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரணை செய்ய கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி எனது நிறுவனத்துக்கு வந்த போலீஸார்,  உறையூர் காவல்நிலைய ஆய்வாளரை வந்து பார்க்குமாறு கூறினர். இதையடுத்து, அங்கு சென்ற என்னையும், எனது மேலாளரையும் ஆய்வாளர் கென்னடி தகாத வார்த்தையில் திட்டியதுடன் தாக்கவும் செய்தார். மேலும்,  ரூ.55 ஆயிரத்தை தருவதாக எழுதித் தராவிட்டால் குற்றவழக்கு பதிவு செய்து கைது செய்துவிடுவதாகவும் மிரட்டினார். எனவே, சட்டவிரோதமாக என்னை காவல் நிலையத்தில் அடைத்து வைத்து தாக்கி மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்  ஆய்வாளர் கென்னடி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
ரூ. 50 ஆயிரம் அபராதம்: இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை. ஜெயச்சந்திரன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரத்தில்  ஆய்வாளர் கென்னடி மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட ஞானவேலுக்கு ரூ.50 ஆயிரத்தை நிவாரணமாக ஒரு மாதத்துக்குள் தமிழக அரசு வழங்கிவிட்டு, அந்தத் தொகையை கென்னடியின் மாத சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்ளவும், கென்னடி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்து 
உத்தரவிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com