காவல்துறை வாகனங்களில் ஆளுங்கட்சி பணம் கடத்தல்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 

காவல்துறை வானகங்களில் ஆளுங்கட்சி பணம் கடத்தலில் ஈடுபடுவதாகவும், இதுகுறித்து தீவிர சோதனை தேவையென்றும், திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
காவல்துறை வாகனங்களில் ஆளுங்கட்சி பணம் கடத்தல்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 

பொள்ளாச்சி: காவல்துறை வானகங்களில் ஆளுங்கட்சி பணம் கடத்தலில் ஈடுபடுவதாகவும், இதுகுறித்து தீவிர சோதனை தேவையென்றும், திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

வியாழனன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், பொள்ளாச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அதன் விவரம் பின்வருமாறு:

நாடாளுமன்றத் தேர்தலில் இந்தப் பொள்ளாச்சி தொகுதிக்கு நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் சண்முகசுந்தரம் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க உதயசூரியனுக்கு ஆதரவு தரவேண்டும் என்று நான் கேட்க வந்திருக்கின்றேன். ஏதோ தேர்தலுக்காக மட்டும் வந்து போகின்றோம் என்று எண்ணிவிடக் கூடாது, ஆட்சியில் இருந்தாலும் இல்லாமல் போனாலும் பொறுப்பில் இருந்தாலும் இல்லாமல் போனாலும் உங்களோடு இருந்து பணியாற்றக்கூடியவர்கள் நாங்கள்.

நானும் ஒரு மகளைப் பெற்றவன் தான். நானும் ஒரு மகளுக்கு தந்தையாக இருக்கக் கூடியவன் தான். அதனால் தான் எனக்கு அந்த வருத்தம் மேலோங்கி நிற்கின்றது. எனக்கு மட்டுமல்ல பெண்ணை பெற்றெடுத்து இருக்கக்கூடிய பெற்றோர்கள் யாராக இருந்தாலும் இருக்கக்கூடிய உண்மை அது தான். நான் என் உரையை துவங்குவதற்கு முன்பு ஒன்றை அழுத்தம் திருத்தமாக குறிப்பிட விரும்புகின்றேன்.

பொள்ளாச்சி விவகாரத்தை நான் அரசியலாக்க விரும்பவில்லை ஆனால், நியாயம் கிடைக்கவேண்டும், எனவே தீர்மானம் போடுவோம், விசாரணையை முறையாக நடத்த வேண்டும், அது சி.பி.சி.ஐ.டி விசாரணையாக இருந்தாலும், சி.பி.ஐ விசாரணையாக இருந்தாலும், பொறுப்பில் இருக்கக்கூடிய நீதிபதியின் தலைமையில், நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும் என்று தீர்மானம் போட்டு செய்தியாளர்களிடம் எடுத்துச் சொன்னோம்.

எங்கள் ஆட்சியின் மீது எந்தப் புகாரும் கிடையாது, நான் ஆட்சியை முறையாகத்தான் நடத்திக் கொண்டிருக்கிறேன், பூதக்கண்ணாடி வைத்து பார்த்தால் கூட என் ஆட்சியின் மீது எந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியாது என்று யார் சொல்லுகிறார் என்றால், முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி சொல்லுகின்றார்.

எடப்பாடி பழனிசாமி அவர்களே, உங்கள் ஆட்சியில் உள்ள குறைகளை கண்டுபிடிக்க பூதக்கண்ணாடி தேவையில்லை வெறும் கண்ணே போதும், வெறும் கண் கூடத்தேவையில்லை நாற்றம் அடிக்கிறது. நாற்றத்தை வைத்து உங்கள் ஊழலை கண்டுபிடித்து விடலாம். அவ்வளவு அக்கிரமங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. அரசியலுக்காக நான் பொள்ளாச்சி விவகாரங்களை பேசி வந்து இருக்கின்றேன் என்று யாரும் கருத வேண்டிய அவசியம் இல்லை.

இந்த கடைந்தெடுத்த கயவர் கும்பலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை நிற்பது நியாயமா? துணை சபாநாயகராக இருக்கக்கூடிய பொள்ளாச்சி ஜெயராமன் துணை நிற்பது நியாயமா? அமைச்சராக இருக்கும் வேலுமணி இதற்குப் பின்புலமாக நிற்பது அடுக்குமா? நியாயமா? பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியக்கூடாது, என்று ஏற்கனவே உச்சநீதி மன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. உச்சநீதிமன்றம் வழங்கிய இருக்கக்கூடிய தீர்ப்பைப் பற்றி கவலைப்படாமல் அந்தப் பெண்ணின் பெயரையும் முகவரியையும் அரசு வெளியிடுகின்றது என்று சொன்னால், தலைமைச் செயலாளர் என்ன ஐ.ஏ.எஸ் படித்தாரா? இல்லையா? உள்துறைச் செயலாளர் என்ன ஐ.ஏ.எஸ் படித்தாரா? டி.ஜி.பி என்ன ஐ.பி.எஸ் படித்து இருக்கின்றாரா? உளவுத்துறை அதிகாரியாக காவல்துறையில் இருக்கும் சத்தியமூர்த்தி, அவர் என்ன ஐ.பி.எஸ் படித்தாரா? தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளரும் ஒரு பெண் தான், இது கூட அவருக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டதா? ஆத்திரம் கண்ணை மறைக்கின்றது.

எனவே, யாரையாவது அவர்கள் சிக்க வைத்துவிட்டு தாங்கள் தப்பித்துக் கொள்ள வேண்டும், என்று பாதிக்கப்பட்ட பெண்ணை காட்டிக் கொடுத்திருக்கின்றார்கள். இந்த நேரத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன்கள், எந்தளவிற்கு சம்பந்தப்பட்டு இருக்கின்றார்கள் என்பதை போலீசார் வெளிச்சத்திற்கு கொண்டு வர மாட்டார்கள்

எனவே, இந்த நிலையில் அழுத்தம் திருத்தமாக சொல்கின்றேன். இனிமேல் ஒரு நிமிடம் கூட எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சர் பதவியில் நீடித்து இருப்பது என்பது நியாயமற்றது.

அந்தப் பதவியில் இருக்கக்கூடிய அருகதை, யோக்கியதை எடப்பாடி பழனிசாமிக்கு கிடையவே கிடையாது. தொடர்ந்து அவர் தான் ஆட்சியில் இருப்பார் என்று சொன்னால், அந்த நச்சு சக்திகள் எல்லாம் வெளியில் வந்து விடும்.

எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அமைச்சர்கள் யார் அதிகம் ஊழல் வைத்திருக்கின்றார்கள் என்று போட்டி வைத்தால் அதில் முதல் இடம் வேலுமணி தான். ஒன்னா நம்பர் கேடி யார்? ஒன்னா நம்பர் அயோக்கியன்? ஒன்னா நம்பர் ஊழல்வாதி யார்? வேலுமணி. இதை நான் சொல்லவில்லை நீங்கள் சொல்கிறீர்கள். ஏன் நான் பயப்பட வேண்டும்? நானும் சொல்கின்றேன் உங்களோடு சேர்ந்து சொல்கின்றேன் ஊழல்வாதி தான், ஒன்னா நம்பர் கேடிதான், ஒன்னா நம்பர் லஞ்சப் பேர்வழிதான்.

15 நாட்களுக்கு முன்பு பிரபலமான பத்திரிக்கை. தி.மு.க பத்திரிக்கை அல்ல அது. இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கக்கூடிய பத்திரிக்கை டைம்ஸ் ஆப் இந்தியா என்ற ஆங்கிலப் பத்திரிக்கை, அந்தப் பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்கள். உள்ளாட்சித்துறையில் அமைச்சராக இருக்கக்கூடிய வேலுமணி, அவருடைய குடும்பம் அவருடைய பினாமிகள், அவருக்கு வேண்டியவர்களுக்குத்தான் கொடுக்கப்படுகின்றது. 100 கோடியைத் தாண்டக்கூடிய நிலையில் அவர்களுக்குத்தான் கொடுக்கப்படுகின்றது. அதில் கமிசன் போகின்றது, என்று புள்ளி விவரத்தோடு ஆதரத்தோடு வெளியிட்டிருந்தார்கள் என்று கம்பெனியின் பெயர்கள் எல்லாம் போட்டிருந்தார்கள்.

கே.சி.பி இன்ஜினியர்ஸ் வரதன் இன்ஃப்ரா ஸ்ட்ரா ஸ்ட்ரக்சர்ஸ், அதேபோல் கன்ஸ்ட்ரா ஸ்ட்ரக்சர்ஸ் உள்ளிட்ட இந்த நிறுவனங்களுக்குத் தான் கொடுக்கப்படுகின்றது. இந்த கம்பெனிகளுக்கு யார் பங்கு தாரராக இருக்கின்றார்கள் என்ற செய்தியை நான் அல்ல, டைம்ஸ் ஆப் இந்தியாவில் போட்டிருக்கின்றது.

6 நாட்களுக்கு முன்பு அவருக்கு மிகமிக வேண்டிய உள்ளாட்சித்துறைக்கு அப்பால் இருக்கக்கூடிய பல பணிகளை, எடுக்கக்கூடிய மிகப்பெரிய ஒப்பந்ததாரர் சபேசன். சென்னை பூந்தமல்லியில் அவருடைய வீட்டில், அலுவலகத்தில், அவருடைய தொழிற்சாலையில், ரெய்டு நடந்துள்ளது. ஏறக்குறைய 200 கோடியைத் தாண்டக்கூடிய அளவிற்கு பணத்தை பறிமுதல் செய்து இருக்கின்றார்கள். இவர் வேலுமணிக்கு மிக மிக வேண்டியவர். அவர்தான் வலதுகரம். 16 கோடி என்று விளம்பரப்படுத்துகிறார்கள். ஆனால், எடுத்தது 200 கோடி. இதை ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் ஆதாரத்தோடு எடுத்து வெளியிட்டு இருந்தார்கள். ரெய்டு நடந்து கொண்டிருக்கும்போதே அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து விட்டது, உண்மை அல்ல. அதிலிருந்து தப்பித்துக்கொள்ள நெஞ்சை பிடித்துக் கொண்டார், மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்து விட்டார்கள். அதற்குப் பிறகு டெல்லி மேலிடத்திலிருந்து போன். யார் மேலிடம்? எனவே தடுத்து நிறுத்தியாகி விட்டது.

சில தினங்களுக்கு முன்பு தி.மு.கழக பொருளாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் வீட்டில் ரெய்டு நடந்தது. நடத்துங்கள் நான் தவறென்று சொல்லவில்லை.

ஏதாவது தவறுகள் இருந்தால் நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும். நோட்டீஸ் அனுப்ப வேண்டும், செய்தி சொல்ல வேண்டும் அல்லது வாரண்ட் காண்பித்து உள்ளே வர வேண்டும். அண்ணன் துரைமுருகன் அவர்கள் உள்ளே விட்டு விட்டார். ஏறக்குறைய இரண்டு நாட்கள், அவரது வீட்டில் கல்லூரிகளில் விடிய விடிய சோதனை நடந்தது எதுவும் கிடைக்கவில்லை, கண்டுபிடிக்க முடியவில்லை. ஏதோ கொஞ்சம் பணம் இருந்தது அதற்கும் கணக்கு இருந்ததால் சென்று விட்டார்கள். அதற்குப் பிறகு ஒரு நாள் இடைவெளியில் அடுத்த நாள் மறுபடியும் வேறு பல வீடுகளில் சோதனை செய்து அங்கிருந்து பணம் எடுத்து இருக்கின்றார்கள்.

எங்கள் நாங்கள் தவறு செய்திருந்தால் எங்கள் மீது வழக்கு போடு. இதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் விசாரித்தோம். தேர்தல் வரப்போகின்றது வேட்பாளர் ஓட்டு கேட்க செல்ல வேண்டும் கட்சி வேலைகள் இருக்கின்றது, மக்களைப் போய்ச் சந்திக்க வேண்டும் என்று கேட்டோம். சோதனை செய்பவர்கள் பகலில் வந்தால் கூட பரவாயில்லை. இரவில் விடிய விடிய இரண்டு நாட்கள் தூங்க முடியாமல் சாப்பிட முடியாமல் இருந்திருக்கின்றார்கள். இது நியாயமா என்று கேட்பொழுது எங்களுக்கு தெரியாது புகார் வந்தது நடவடிக்கை எடுத்தோம் என்கின்றார்கள். புகார் வந்ததா? யாரை ஏமாற்றுகிறீர்கள்?

அதுமட்டுமல்ல இப்பொழுது வாட்ஸ் அப்பில் செய்திகள் வருகின்றது, காரில் வருகின்ற பொழுது நான் பார்த்தேன். காவல்துறை வேனில் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு போவதாக செய்தி. போனமுறை ஆம்புலன்சில் பணத்தை எடுத்துக்கொண்டு போனார்கள் அன்புநாதன் வீட்டிலும் அரசு ஆம்புலன்ஸ் இருந்தது. எனவே இந்த முறை காவல்துறையில் பயன்படுத்தப் போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ரோட்டில் செல்லும் எல்லா காரையும் வழிமறித்து நிறுத்தி வருகிறீர்கள். அது கட்சிக்கு அப்பாற்பட்டு இருக்கக்கூடிய மக்களின் காரையும் நிறுத்துகிறீர்கள், வியாபாரிகளின் காரையும் நிறுத்துகிறீர்கள். 1 இலட்சம், 20 ஆயிரம், 50 ஆயிரம் இருந்தால் சோதனை போடுகின்றீர்கள், அதற்காக கணக்கு காட்ட சொல்கின்றீர்கள், கணக்கு இருந்தால் திருப்பிக் கொடுத்து விடுகின்றீர்கள். நான் அதை தவறு என்று சொல்லவில்லை, சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை.

அதேநேரத்தில் காவல்துறையை வைத்து பணத்தை கொண்டு செல்கின்றார்கள் என்று நாங்கள் சொல்கின்றோம். ஏனென்றால், தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் காவல்துறை என்பது போற்றத்தக்க சிறப்புத் துறையாக இருந்தது, இப்பொழுது இந்தக் காவல்துறை இந்த ஆட்சியின் ஏவல் துறையாக மாறி இருக்கின்றது. அதற்கு பல உதாரணங்கள். அதில் ஒரு உதாரணம் தான் பொள்ளாட்சி உதாரணம்.

தேர்தல் கமிஷனுக்கு ஒரு எச்சரிக்கை, பொள்ளாச்சியில் நடைபெறக்கூடிய இந்தப் பொதுக்கூட்டத்தில் நின்றுகொண்டு கூட்டணி கட்சிகளின் சார்பில் நான் தெரிவிக்க விரும்புகிறேன். காவல்துறை வாகனத்தையும் சோதனையிட வேண்டும். அதை சோதனையிடவில்லை என்று சொன்னால், நாங்கள் அல்ல இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய வாக்காளர்களே வாகனத்தை வழிமறித்து சோதனையிட தயாராக இருக்கின்றார்கள். அப்படி ஒரு நிலைமை வரப்போகின்றது. அந்த நிலைக்கு எங்களை தேர்தல் ஆணையம் விடாது என்று நாங்கள் நம்புகின்றோம்.

அ.தி.மு.க-வின் உண்மைத் தொண்டனுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் இரத்தம் சிந்தி, பாடுபட்டு உழைத்த உங்களுக்காக, உங்கள் அம்மாவின் மர்மமான மரணத்தை கண்டறிந்து தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்ததும், முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரண்த்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களைச் சிறைக்கு அனுப்பும் முதல் வேலை இந்த ஸ்டாலின் வேலையாக இருக்கும். அதை மறந்துவிடாதீர்கள்.

கொடநாடு விவகாரம் பற்றி பேசும்போது முதலமைச்சரை சம்பந்தப்படுத்தி பேசக்கூடாது என்று நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். உண்மையைத்தான் ஸ்டாலின் பேசுகின்றார் பேசட்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com