
காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து பேசிய அன்புமணி ராமதாஸ்.
விவசாயிகளுக்கும் முதலாளிகளுக்கும் இடையேயான போட்டியே இத்தேர்தல் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை அவர் பேசியது: திமுக கூட்டணியில் முன்னாள் அமைச்சர்கள், வாரிசுகள், பெரும் பணக்காரர்கள், சாராய வியாபாரிகள், முதலாளிகளுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும். ஆனால், பாமக இடம்பெற்ற அதிமுக தலைமையிலான கூட்டணி விவசாயிகளின் நலம் நாடும் அணி.
பாமக நிறுவனர் ராமதாஸ் அடிப்படையில் ஒரு விவசாயி. அவர் மட்டுமல்ல கூட்டணியில் உள்ள எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என பலரும் விவசாயிகள்தான். அதனால், இத்தேர்தல் விவசாயிகளுக்கும், முதலாளிகளுக்கும் நடக்கும் போட்டியே.
அதிமுக, பாமக அமைத்துள்ள மெகா கூட்டணியில் வாக்கு வங்கி உள்ள கட்சிகள் இணைந்துள்ளன. ஆனால், திமுக கூட்டணியில் எந்தக் கட்சிக்கும் வாக்கு வங்கி இல்லை. பணபலத்தை மட்டுமே நம்பி போட்டியிடும் அவர்களிடம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் கூடிய நல்ல திட்டங்களும் இல்லை.
ஒருகாலத்தில் பால்போல் ஓடிய பாலாறு, தற்போது வறண்டு கிடக்கிறது. கோதாவரி நதிநீர் இணைப்புத் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ. 65 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்க உள்ளது.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் 1,000 டிஎம்சி தண்ணீர் தெலங்கானா, ஆந்திரம், தமிழகத்துக்கு பகிர்ந்தளிக்கப்படும். அதில், தமிழகத்துக்கு கிடைக்கும் 200 டிஎம்சி தண்ணீரில் 50 டிஎம்சியை பாலாறு, தென் பெண்ணை ஆறுகளுக்கு திருப்பிவிடும்போது ஆண்டு முழுவதும் பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதன் மூலம் பாசனம், குடிநீர்ப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தக்கூடிய இதுபோன்ற திட்டங்கள் திமுக கூட்டணி கட்சிகளிடம் இல்லை. இதை எண்ணித்தான் திமுக தலைவர் ஸ்டாலின் எங்கள் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். அவருக்கு தோல்வி பயம் வந்து விட்டதால், செய்வதறியாமல் புலம்புகிறார்.
கடந்த 2 நாள்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் பேசிய அவர், வன்னியர் சொத்துகளை பாமக அபகரிப்பதாகக் கூறியுள்ளார். அபகரிப்புக்குப் பெயர் பெற்றவர்களே திமுகவினர்தான். எங்களுக்கு கொடுத்து பழக்கமே தவிர எடுத்து பழக்கம் இல்லை. அவர்கள் குற்றம் சுமத்துவதாக இருந்தால் நாங்கள் எந்த விசாரணைக்கும் தயாராகவே உள்ளோம். அதேசமயம், ஸ்டாலின் எங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். இல்லையேல், அவர் கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். இதையே அக்கட்சியில் உள்ள பலரும் விரும்புகின்றனர்.
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக கூறும் நிலையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உயர் கல்வி பொதுப் பட்டியலிலும், பள்ளிக் கல்வி மாநிலப் பட்டியலிலும் இருக்கும் எனக் கூறியுள்ளது. மேலும், திமுக கொண்டு வந்த நீட், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் உள்ளிட்ட திட்டங்களை அவர்களே ரத்து செய்வதாகவும் கூறுகின்றனர். இப்படி பல முரண்பாடுகளைக் கொண்டது திமுக கூட்டணி.
அரக்கோணம் தொகுதியில் 10 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்த ஜெகத்ரட்சகன் தேர்தலுக்குப் பிறகு தொகுதிப் பக்கம் தலைகாட்டுவதே இல்லை. தமிழர்களைக் கொன்று குவித்த சிங்களர் வாழ்க்கையை உயர்த்த இலங்கையில் ரூ. 26 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்கியுள்ள அவர், இந்தத் தொகுதி மக்களின் வேலைவாய்ப்புக்காக எந்த முதலீடும் செய்யவில்லை. அவரை வெற்றிபெறச் செய்தால் மக்கள் நலன்தான் பாதிக்கப்படும் என்றார் அவர்.
ஸ்ரீபெரும்புதூரில்...
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில், அதிமுக கூட்டணியைச் சேர்ந்த பாமக வேட்பாளர் அ.வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியது:
தோல்வி பயம் காரணமாக மு.க.ஸ்டாலின் விரக்தியின் உச்சத்தில் உள்ளார். திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்பதால் அவர் பாமக மீது ஆத்திரத்தில் உள்ளார். அதனால் என்ன பேசுவது என்று தெரியாமல் தொடர்ந்து பொய் பேசி வருகிறார். நமது நோக்கம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தொழில் வளர்ச்சியில் முதலிடம் பெறவேண்டும். மூடிய தொழிற்சாலைகள் திறக்கப்பட வேண்டும். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தின் உரிமைகளைப் பெறுவதற்காகவே கூட்டணி வைத்துள்ளோம் என்றார் அவர்.
ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனி தலைமையில் நடைபெற்ற இந்த பிரசாரக் கூட்டத்தில், அதிமுக மாவட்டச் செயலர் வாலாஜாபாத் பா.கணேசன், தேமுதிக மாவட்டச் செயலர் அனகை டி.முருகேசன், பாஜக நிர்வாகி பாபு, புரட்சிபாரதம் கட்சி மாவட்டச் செயலர் எஸ்.பி.சி.தனசேகரன், பாமக நிர்வாகி ஆறுமுகம், அதிமுக மாவட்டத் துணைச் செயலர் போந்தூர் செந்தில்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.