கி.வீரமணி பங்கேற்ற கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் 

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்ற கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
கி.வீரமணி பங்கேற்ற கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் 

சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்ற கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து, திருச்சி தாராநல்லூர் கீரைக்கடை பஜார் அருகே 04.04.2019 அன்று மாலை திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தி.க.தலைவர் ஆசிரியர்.கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் திடீரென்று புகுந்த இந்து முன்னணி அமைப்பினர், பொதுக்கூட்ட மேடை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தி.க.வை சேர்ந்த ஒருவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. மேலும், பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு திரு.கி.வீரமணி அவர்கள் வேனில் சென்று கொண்டிருக்கும் போது, அதே பகுதியில் உள்ள இ.பி ரோட்டில் வேனை மறித்து இந்து முன்னணியினர் கலகம் செய்துள்ளனர்.

ஏற்கனவே, “தினமலர்” நாளிதழில் அவரை தாக்க வேண்டும் என, கேள்விபதில் பாணியில் செய்தி வந்தபோதே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும், தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், கோரியிருந்தது. தற்போது இந்து முன்னணியினர் பொதுக்கூட்ட மேடைக்கே சென்று தாக்கியுள்ளனர். இதன் பிறகும் அவருக்கு காவல்துறை போதிய பாதுகாப்பு அளிக்காததால், வேனில் திரும்பும் போதும் தாக்க முற்பட்டுள்ளனர்.

தி.க.தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழகத்தின் மூத்த தலைவர் ஆவார். இவர்மீது இந்துத்துவ அமைப்புகள் கொலை நோக்கோடு தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை இனிமேலும் மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் அனுமதிக்காது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கின்றது. மேலும் திரு.கி.வீரமணி அவர்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு பிறகும், போதிய பாதுகாப்பு வழங்காமல் உள்ள தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு  வன்மையாக கண்டிக்கின்றது.

தமிழக அரசு உடனடியாக தி.க.தலைவர் திரு.கி.வீரமணி அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றது. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனில் “தமிழக அரசே பொறுப்பு” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கின்றது.    

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com