காஞ்சியில் மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் கொடுமை; காவல்துறை அலட்சியம்: மா.கம்யூ., கண்டனம் 

காஞ்சியில் மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் கொடுமை நிகழ்ந்த சம்பவத்தில் காவல்துறை அலட்சியம் காட்டுவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
காஞ்சியில் மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் கொடுமை; காவல்துறை அலட்சியம்: மா.கம்யூ., கண்டனம் 

சென்னை: காஞ்சியில் மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் கொடுமை நிகழ்ந்த சம்பவத்தில் காவல்துறை அலட்சியம் காட்டுவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

காஞ்சிபுரத்தில் வீட்டு அருகே நின்று கொண்டிருந்த 15 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை 03.04.2019 அன்று சமூக விரோதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ரோட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை துடியலூரில் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மனதில் இருந்து இன்னும் நீங்காத நிலையில், காஞ்சிபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளானது தமிழக மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரமான சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு  வன்மையாக கண்டிக்கிறது.

இச்சம்பவத்தன்று மாலை 5 மணி வாக்கில் சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் சிறுமியை காணவில்லை என புகார் கொடுத்துள்ளனர். அப்போதே உடனடியாக காவல்துறை செயலில் இறங்கியிருந்தால் சிறுமியை மீட்டிருக்க முடியும். ஆனால் காவல்துறை காலம் கடத்தியதன் விளைவாக, அச்சிறுமி அன்றிரவு முழுவதும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு உடல் முழுவதும் காயங்களுடன் ரோட்டில் வீசப்பட்டுள்ளார். பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, துடியலூரில் சிறுமி கொலை சம்பவம் போன்று அடுக்கடுக்கான சம்பவங்கள் நடைபெற்ற போதிலும் காவல்துறை துடிப்புடன் செயல்பட மறுத்து வருவது ஆழ்ந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது,

இச்சம்பவம் குறித்து காவல்துறை கண்காணிப்பாளரிடம் நேரில் புகார் தெரிவிக்கச் சென்ற அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளின் சங்கத் தலைவர்களிடம் காவல்துறை கண்காணிப்பாளர் உண்மைக்கு மாறாக பாதிக்கப்பட்ட சிறுமி மாற்றுத் திறனாளி இல்லை எனவும், வழக்கின் முதல் தகவல் அறிக்கை பெற்றோருக்கு அளிக்கப்பட்டது என்றும் கூறி குழப்ப முயற்சி செய்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

காஞ்சிபுரத்தில் இதுபோன்று தொடர்ந்து செயல்பட்டு வரும் சமூக விரோதக் கும்பல் இச்சம்பவத்திற்கு பின்னால் இருப்பதாக கருத வேண்டியுள்ளது. வழக்கை மூடிமறைக்கவும், புகாரை வாபஸ் பெற வேண்டுமெனவும் இக்கும்பல் நிர்ப்பந்தப்படுத்தி வருவதாகவும், இதன் காரணமாகவே காவல்துறை மெத்தனமாக இருப்பதாக தோன்றுகிறது.

எனவே, தமிழக அரசு வேறு பொருத்தமான மூத்த பெண் காவல்துறை அதிகாரியைப் பொறுப்பாக நியமித்து இவ்வழக்கை விசாரிக்க வேண்டுமெனவும்; இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டுமெனவும்; வழக்கு முடியும் வரை கைது செய்யப்பட்டுள்ளவர்களை ஜாமீனில் வெளிவராத வகையில் உரிய விழிப்புடன் இருந்து இவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் புகார் அளித்துள்ள குடும்பத்தினருக்கு சமூக விரோத சக்திகள் மூலம் மிரட்டல்கள் விடப்படாமல் இருப்பதற்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com