வேலூரில் வருமான வரிச் சோதனை: கதிர் ஆனந்த் உட்பட மூவர் மீது வழக்குப் பதிவு 

வேலூரில் நடத்தப்பட்ட வருமான வரிச்சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது  காட்பாடி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூரில் வருமான வரிச் சோதனை: கதிர் ஆனந்த் உட்பட மூவர் மீது வழக்குப் பதிவு 

வேலூரில் நடத்தப்பட்ட வருமான வரிச்சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது  காட்பாடி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறைச் சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, வருமான வரித்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், கதிர் ஆனந்த் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் இதுவரை பறக்கும் படையினரால் ரூ.124.53 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பணம் பறிமுதல் செய்யப்பட்டதன் பின்னணி:
துரைமுருகன் ஆதரவாளர்கள் வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணும் பணி இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதன்மூலம், வருமானவரி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு மொத்தம் ரூ. 11.48 கோடி என மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார். 

திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் டி.எம்.கதிர்ஆனந்த் வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். 

இந்நிலையில், காட்பாடி பகுதியில் உள்ள துரைமுருகனின் ஆதரவாளர்கள் வீடுகளில் தேர்தல் செலவினப் பார்வையாளர் உஜ்வல்குமார் தலைமையில் வருமான வரித் துறை அதிகாரிகள் 7 குழுக்களாகப் பிரிந்து கடந்த வாரம் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது, காட்பாடி அருகே வள்ளிமலை சாலை பள்ளிக்குப்பத்தில் உள்ள திமுக விவசாய அணி மாநகர துணை அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசனின் சகோதரி விஜயாவுக்குச் சொந்தமான வீடு, சிமெண்ட் கிடங்கில் சாக்கு மூட்டைகள், அட்டைப் பெட்டிகள், துணிப் பைகளில் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டன. 

பெரும்பாலும் 200 ரூபாய் நோட்டுகளாக இருந்த அந்தப் பணக்கட்டுகளில் ஊர்பெயர், வார்டு எண் ஆகியவையும் குறிப்பிடப்பட்டிருந்ததால் அவை தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என  தெரியவந்துள்ளது.

பிடிபட்ட இந்தப் பணக்கட்டுகளை எண்ணும் பணி திங்கள்கிழமை காலை 11 மணியளவில் தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி வரை நடைபெற்றது. 

துணை ராணுவப் பாதுகாப்புடன் பணக்கட்டுகள் முழுவதுமாக எண்ணப்பட்டு அவற்றின் வரிசை எண்களும் பதிவு செய்யப்பட்டன. பின்னர், அந்தப் பணக்கட்டுகள் 14 அட்டைப்பெட்டிகளில் நிரப்பப்பட்டு துணை ராணுவ பாதுகாப்புடன் சிற்றுந்தில் ஏற்றி சென்னை வருமானவரி அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பணக்கட்டுகளுடன் கைப்பற்றப்பட்ட ஆவணங்களும் 2 பைகளில் கொண்டு செல்லப்பட்டன. 

துரைமுருகன் வீட்டில் நடந்த முதற்கட்ட சோதனையில் ரூ. 10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட இந்த இரண்டாம் கட்ட சோதனையில் ரூ. 11.48 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதை மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான எஸ்.ஏ.ராமன் உறுதிப்படுத்தினார்.

இதனிடையே, கைப்பற்றப்பட்ட பணம் குறித்து வருமானவரித் துறையினரிடம் கேட்டதற்கு, அந்தப் பணத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று துரைமுருகன் தெரிவித்திருந்தார். 

அதேசமயம், விஜயா வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து அவரிடமோ, அவரது சகோதரர் பூஞ்சோலை சீனிவாசனிடமோ வருமானவரித் துறையினர் உடனடியாக விசாரணை நடத்தவில்லை. கால அவகாசத்துடன் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என்றும், இந்த விசாரணையின்போது பிடிபட்ட பணத்துக்கு கணக்கு காட்டாத பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

சோதனை நடைபெற்ற இடங்களில் துணை ராணுவ படை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வேலூர் மாவட்ட அதிகாரிகள் சோதனை நடந்த வீடுகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை. 

தேர்தல் பொதுப் பார்வையாளர் உஜ்வல்குமார், வருமான வரித் துறை அதிகாரிகள்  மட்டுமே நேரடியாக சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

சோதனை விவரம் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைப்பு
இதுதொடர்பாக, மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.ஏ.ராமனிடம் கேட்டபோது, வேலூர் மாவட்டத்தில் நடந்த சோதனையில் ரூ. 11.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித் துறையினர் கணக்குத் தெரிவித்துள்ளனர். இந்தச் சோதனை மாவட்டத் தேர்தல் பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொகுதியில் தேர்தல் நடத்துவது, ரத்து செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். எனினும்,  இந்தச் சோதனை தொடர்பான முதல்நிலை விவரங்கள் மட்டும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com