சிலை கடத்தல் வழக்கை பொன். மாணிக்கவேல் தொடரலாம்; கைது செய்யும் அதிகாரம் இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சிலை கடத்தல் வழக்கை சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன். மாணிக்கவேல் தொடரலாம் என்று அனுமதி அளித்திருக்கும் உச்ச நீதிமன்றம், விசாரணையின் போது யாரையும் கைது செய்யும் அதிகாரம் இல்லை என்று உத்தரவிட்டுள
சிலை கடத்தல் வழக்கை பொன். மாணிக்கவேல் தொடரலாம்; கைது செய்யும் அதிகாரம் இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


புது தில்லி: சிலை கடத்தல் வழக்கை சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன். மாணிக்கவேல் தொடரலாம் என்று அனுமதி அளித்திருக்கும் உச்ச நீதிமன்றம், விசாரணையின் போது யாரையும் கைது செய்யும் அதிகாரம் இல்லை என்று உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை ரத்து செய்தும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க பொன். மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று இந்த அதிரடி தீர்ப்பை பிறப்பித்தனர்.

ஓய்வு பெற்ற அதிகாரிக்கு கைது செய்யும் அதிகாரம் இல்லை என்பதால், சிலை கடத்தல் வழக்கு விசாரணையின் போது குற்றவாளிகளை பொன். மாணிக்கவேல் கைது செய்யும் அதிகாரம் கிடையாது என்று உத்தரவிட்டிருக்கும் உச்ச நீதிமன்றம், அந்த அதிகாரத்தை  புதிய ஐஜியான அபய்குமாருக்கு அளித்துள்ளது.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராகவும் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று அறிவித்தது.

கடந்த பிப்ரவரி 21-இல் நடைபெற்ற விசாரணையின் போது,  எதிர்மனுதாரர் யானை ராஜேந்திரன் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஆர். பசந்த் ஆஜராகி, சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், திறமையான அதிகாரி என்பதாலும் பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது என்றார்.

இதைத் தொடர்ந்து, மற்றொரு எதிர்மனுதாரரான பொன் மாணிக்கவேல் சார்பில் வழக்குரைஞர் ஆர். ஆனந்த் பத்மநாபன் வாதிடுகையில்,  பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கடந்த ஓராண்டில் அக்டோபர் வரை மட்டும் 270 சிலைகளை மீட்டுள்ளது என்றார். 

இதையடுத்து,  தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் பதில் அளித்து வாதிடுகையில்,  பொன் மாணிக்கவேல் தனக்கு அரசியலமைப்பு பதவி வழங்கப்பட்டுள்ளதாக நினைத்துக் கொள்கிறார். அவர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதால், வேறு எந்த அதிகாரியும் நேர்மையாக செயல்படவில்லை என அர்த்தம் கொள்ள முடியாது என்று வாதத்தை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com