ஆண்டிபட்டியின் அரசராகப் போவது அண்ணனா-தம்பியா?

தமிழகத்துக்கு 3 முறை முதல்வர்களை தந்ததால் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ள ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதியில்
ஆண்டிபட்டியின் அரசராகப் போவது அண்ணனா-தம்பியா?

தமிழகத்துக்கு 3 முறை முதல்வர்களை தந்ததால் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ள ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் ஆண்டிபட்டி தாலுகா, கம்பம் ஊராட்சி ஒன்றியம், காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி, கூடலூர் நகராட்சி, ஹைவேவிஸ் பேரூராட்சி ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளன.

இங்கு முக்குலத்தோர் சமுதாயத்தினர் பெருவாரியாகவும், ஆதிதிராவிடர், நாயக்கர், கவுண்டர் சமுதாயத்தினர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். கடந்த 1971-ஆம் ஆண்டு வரை சுதந்திராக் கட்சி வெற்றி பெற்று வந்த  இத்தொகுதியில், 1977-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஒரு இடைத்தேர்தல் உள்பட 11 தேர்தல்களில் 9 முறை அதிமுகவும், 2 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.  இங்கு, அதிமுக சார்பில் கடந்த 1980-இல் திரைப்பட நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனும், 1984-இல் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபடியே எம்.ஜி.ஆரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

கடந்த 2001-இல் இத்தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற தங்க. தமிழ்ச்செல்வன், ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட வாய்ப்பாக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், 2012-இல் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் மற்றும் 2006-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தங்க. தமிழ்ச்செல்வன் 91,721 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட எல். மூக்கையா 70,690 வாக்குகள் பெற்றார். 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட்ட தங்க. தமிழ்ச்செல்வன் 1,03,129 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எல். மூக்கையா 72,933 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி 10,776 வாக்குகளும் பெற்றனர்.

அதையடுத்து, தங்க. தமிழ்ச்செல்வன் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், தற்போது இத்தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொண்டுள்ளது.  ஆண்டிபட்டியில்  உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்கா அமைக்கும் திட்டம், மூலவைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் திட்டம், வைகை அணையை தூர்வாரும் திட்டம், குள்ளப்பகவுண்டன்பட்டி அருகே முல்லைப் பெரியாற்றிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள கண்மாய், குளங்களில் நிரப்பி நீராதாரத்தை பெருக்கும் திட்டம் உள்ளிட்டவை நீண்ட காலமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக, இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  இது தவிர, ஆண்டிபட்டி பேரூராட்சியை நகராட்சியாக மாற்றும் திட்டம், ஆண்டிபட்டி புறவழிச்சாலைத் திட்டம், தேனி- மதுரை மாவட்டங்களை இணைக்கும் மயிலாடும்பாறை- மல்லப்புரம் சாலை திட்டம், விருதுநகர்- தேனி மாவட்டங்களை இணைக்கும் கிழவன் கோயில் திட்டம், காமராஜபுரம் மலைச் சாலை திட்டம்  ஆகிய திட்டங்களும் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாதவை. 

வருசநாடு மலைக் கிராமங்களில் வனத்துறையினரின் கெடுபிடியில் சிக்கித் தவித்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். ஆண்டிபட்டி வட்டாரத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். மேகமலை வனப் பகுதியில் மரங்கள் வெட்டி கடத்துவதையும், மூலவைகை ஆறு மற்றும் வைகை அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மணல் திருட்டு நடைபெறுவதையும் தடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கைகளாக உள்ளன.     இத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஆ.லோகிராஜன், திமுக சார்பில் போட்டியிடும் ஆ. மகாராஜன் ஆகியோர் உடன்பிறந்த சகோதரர்கள் ஆவர். இருவரும், அந்தந்தக் கட்சிகளில் ஒன்றியச் செயலர்களாகப் பதவி வகித்து வருகின்றனர்.

மேலும், கடந்த 1996 முதல் 2001 வரை திமுக சார்பில் ஆ. மகாராஜனும், 2002 முதல் 2007 வரை அதிமுக சார்பில் ஆ.லோகிராஜனும் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராகப் பதவி வகித்துள்ளனர்.  முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போட்டியிட்டதை அடுத்து, அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் இத்தொகுதியில், அதிமுகவின்  சின்னமான இரட்டை இலை தங்களுக்கு வெற்றியை தேடித் தரும் என்பது அக்கட்சியினரின் எதிர்பார்ப்பு.    திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கி, அதிமுக-அமமுக போட்டியில் சிதறும் அதிமுக ஆதரவு வாக்குகள், தொகுதியில் விவசாயம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படாததால் பொதுமக்களுக்கு அரசு மீதான அதிருப்தி ஆகியன, தங்களது வெற்றிக்கு வழிகாட்டும் என்பது திமுகவினரின் நம்பிக்கை. ஆண்டிபட்டி அமமுக ஒன்றியச் செயலரான ஆர்.ஜெயக்குமார், அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்.

இவர், துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன், தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் தங்க. தமிழ்ச்செல்வன் ஆகியோரை மட்டுமே நம்பி களத்தில் உள்ளார். வழக்குரைஞராகப் பணிபுரிந்து வரும் இவருக்கு, பொதுமக்களிடம் பெரிதும் அறிமுகம் இல்லை. இருப்பினும், அதிமுகவின் அதிருப்தி வாக்குகள் தமக்கு சாதமாக அமையும் என்பது இவரது கணிப்பு.        நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் அருணாதேவி, மக்கள் நீதி மய்யம் சார்பில் அழகர்சாமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 16 பேர் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர். நட்சத்திர தொகுதியான ஆண்டிபட்டியில் வழக்கம்போல் இம்முறையும் அதிமுக, திமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

இம்முறை அதிமுக தனது கோட்டையை தக்க வைத்துக்கொள்ளுமா? அல்லது கோட்டை விடுமா? என்பது தேர்தல் முடிவுக்குப் பின்னரே தெரியும். -ம.சரவணக்குமார்

வாக்காளர்கள் விவரம் ஆண்கள்     1,28,563, பெண்கள்    1,30,235, மூன்றாம் பாலினத்தவர்    22

மொத்தம்    2,58,820

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com