Enable Javscript for better performance
தற்கொலைகளைத் தடுப்பதில் அனைவருக்கும் பொறுப்பு உண்டு: முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி- Dinamani

சுடச்சுட

  

  தற்கொலைகளைத் தடுப்பதில் அனைவருக்கும் பொறுப்பு உண்டு: முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி

  By DIN  |   Published on : 13th April 2019 03:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  gobala-krishna-gandhi


  தற்கொலைச் சம்பவங்களைத் தடுப்பதற்கான பொறுப்பும், கடமையும் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் உள்ளது என்றார்  மேற்கு வங்க முன்னாள் ஆளுநர்  கோபாலகிருஷ்ண காந்தி.
  சினேகா தன்னார்வ அமைப்பின் 33-ஆவது ஆண்டு விழா மற்றும் தற்கொலைச் சம்பவங்களைத் தடுப்பதற்கான சர்வதேச மாநாட்டின் தொடக்க விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    தொழிலதிபர் நல்லி குப்புசாமி, உலக மன நல மருத்துவ சங்கத் தலைவர் ஹெலன் ஹெர்மன், பிரிட்டன் மருத்துவச் சங்கத் தலைவர் டாக்டர் தினேஷ் பக்ரா உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து கோபாலகிருஷ்ண காந்தி பேசியதாவது:
  தற்கொலைச் சம்பவங்கள் அனைத்தும் உளவியல் ரீதியான பல்வேறு முரண்பாடுகளால் சூழப்பட்டவை. மனதளவில் பலவீனமானவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்ள அச்சப்பட்டுக் கொண்டு மரணத்தை அச்சமின்றி எதிர்கொள்கின்றனர். இது எவ்வளவு பெரிய முரண்பாடு. பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அதிகம் உள்ள நாடுகளில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்ற கூற்று நூறு சதவீதம் உண்மை. அதேவேளையில், பொருளாதாரத்தில் ஒருவர் செல்வந்தராகவே இருந்தாலும், அகத்தில் உள்ள வலிகளுக்கு ஆறுதல்  கிடைக்காத பட்சத்தில், அவரும் தவறான முடிவையே எடுக்கிறார் என்பதையும் மறுக்க இயலாது. ஒருவருக்கு தற்கொலை செய்து கொள்வதற்கான எண்ணம் துளிர்விடுவதற்கு சமூகத்தில் உள்ள அனைவருமே ஏதோ ஒரு வகையில் காரணமாகிவிடுகிறோம். உதாரணமாக குழந்தைகளின் மீது பெற்றோரின் கனவுகள் திணிக்கப்படுகின்றன. 
  பள்ளி, கல்லூரிகளில் தர வரிசை மூலம்தான் அவர்களை மதிப்பிடுகிறோம். அதுமட்டுமல்லாமல் மற்ற குழந்தைகளுடன் ஒப்பீடு செய்து மனதளவில் அவர்களுக்கு அழுத்தம் தரப்படுகிறது. இதன் காரணமாகவே தேர்வில் வெற்றி பெறாத மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதற்கு இத்தகைய சமூக அவலங்களே காரணம். 
  நெருப்பில் விழுந்து உயிரை மாய்க்கும் சம்பவங்களை (உடன்கட்டை)  ஒழிக்க முடிந்த நம்மால்,  இன்று வரை தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளைத் தடுக்க முடியவில்லை. அனுதினமும் நம் கண்முன்னே நடைபெறும் இந்தச் சம்பவங்கள் அனைத்தும் நமக்கு படிப்பினையை அளிப்பவை. 
  அவற்றில் இருந்து தக்க பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி, தற்கொலைச் சம்பவங்களை எவ்வாறு தடுப்பது என்று ஆய்வு செய்ய வேண்டும் என்றார் அவர். முன்னதாக,  சினேகா தன்னார்வ அமைப்பின் நிறுவனர் டாக்டர் லட்சுமி விஜயகுமார் பேசியதாவது: 
  இந்தியாவில் 3 நிமிடத்துக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 15 வயதிலிருந்து 29 வயதுக்குட்பட்டவர்களே அதிகம்  என்பது வேதனைக்குரிய தகவல். 
  இதற்கு உரிய தீர்வு அவசியம். இந்த மாநாட்டில் மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். தேசிய தற்கொலை தடுப்பு வரைவு கொள்கையை விரைந்து அமலாக்குவது தொடர்பாக அவர்களிடம் வலியுறுத்த உள்ளோம் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai