சுடச்சுட

  

  மத்திய அரசின் உத்தரவுக்குப் பிறகும் விலை குறையாத புற்றுநோய் மருந்துகள்

  By DIN  |   Published on : 13th April 2019 03:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  online_medicine


  புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு விலைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும், சில முக்கிய மருந்துகள் இன்னமும் அதிக விலைக்கே விற்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
  புற்றுநோய்க்கான மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், தங்களது விருப்பத்திற்கேற்ப விலை நிர்ணயித்து அவற்றை விற்பனை செய்து வந்தன. இதன் காரணமாக சாமானிய மக்களுக்கு எட்டாத உயரத்தில் மருந்துகளின் விலை ஏற்றம் கண்டது.
  புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள், தங்களது மருந்து தேவைகளுக்கு அரசு மருத்துவமனைகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், புற்றுநோய் சிகிச்சைக்கான 42 முக்கிய மருந்துகளின் விலை நிர்ணயத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது.
  அவற்றின் உற்பத்தி மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் அதிகபட்சமாக எத்தனை சதவீதம் வரை லாபம் வைத்து விற்பனை செய்யலாம் என்ற வரையறைகளும் வெளியிடப்பட்டன.  இதன் மூலம் புற்றுநோய் மருந்துகளின் விலை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றளவும் சில மருந்துகளின் விலை அதிகமாகவே இருந்து வருகிறது.
  இதுகுறித்து மருந்துகளால் ஏற்படும் எதிர்விளைவுகளுக்கு எதிரான அகில இந்திய கூட்டமைப்பைச் (ஏஐடிஏஎன்) சேர்ந்தவர்கள் கூறியதாவது:
  புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு விலைக் கட்டுப்பாடு விதித்துள்ள மத்திய அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கது. இந்த நடவடிக்கையால் சில மருந்துகளின் விலை குறைந்தது உண்மைதான். அதேவேளையில், இன்னும் பல மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருவதை மறுக்க முடியாது. விலைக் கட்டுப்பாட்டுக்கான 42 மருந்துகளை மத்திய அரசு தன்னிச்சையாகத் தேர்வு செய்ததே இதற்குக் காரணம்.
  சிறுநீரக புற்றுநோய்க்கு உட்கொள்ளும் ஆக்ஸிட்டிநிப் - 5 மில்லி கிராம் மருந்து, ஒரு அட்டை ரூ.41,737-க்கு இப்போதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று, தலைப் பகுதி மற்றும் கழுத்துப் பகுதி புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் செட்டக்ஸிமாப் 50 மில்லி லிட்டர் பாட்டில் மருந்தின் விலை ரூ.94,544-ஆக உள்ளது. இதுபோல மேலும் சில மருந்துகள் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
  அவற்றில் சில மருந்துகள் காப்புரிமை பெற்றவை என்பதால், விலைக் கட்டுப்பாட்டு விதிகள் பொருந்துவதில்லை. எனவே, அதன் உற்பத்தியாளர்கள் விருப்பப்படி விலை நிர்ணயம் செய்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். சாமானிய மக்களுக்கு புற்றுநோய் மருந்துகள் எளிதில் கிடைக்கும் வண்ணம் அரசு தகுந்த விதிகளை வகுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai