தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் தேதியை மாற்றக் கோரிய மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை ஏப்ரல் 18-ஆம் தேதி (வியாழக்கிழமை) தவிர்த்து வேறு தேதியில் நடத்த வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை ஏப்ரல் 18-ஆம் தேதி (வியாழக்கிழமை) தவிர்த்து வேறு தேதியில் நடத்த வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. 
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் அணுசரிக்கும் பெரிய வியாழன் என்பதால், கிறிஸ்தவப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, தமிழ்நாடு பேராயர் கவுன்சில் தலைவர் அந்தோனி பாப்புசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அத்துடன், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிர்வக அறங்காவலர் இனிகோ இருதயராஜ் சார்பிலும், தேர்தல் தேதியை மாற்றக் கோரி வழக்குத் தொடுக்கப்பட்டது. 
அந்த வழக்குகளை கடந்த மார்ச் 22-இல் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் தேதியை மாற்றக் கோரிய இரண்டு வழக்குகள், வாக்குச்சாவடிகளை இடமாற்றக் கோரிய வழக்கு உள்ளிட்ட 3 வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இனிகோ இருதயராஜ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த மார்ச் 29-ஆம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 
அதில், மதச் சுதந்திரத்தையும், குடிமக்கள் வாக்களிக்கும் கடமையை உறுதி செய்வதையும் உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் இனிகோ இருதயராஜ் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஆனந்த் குரோவர் ஆஜராகி, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கையை எடுத்துரைத்தார். 
எனினும், மனுதாரர் தரப்பு கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com