"போக்சோ' சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (போக்சோ) குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (போக்சோ) குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
 நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிறுமி தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றிய இளைஞருடன் மாயமானார். இதனைத் தொடர்ந்து மாயமான சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அந்தச் சிறுமியின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தன் மகளை மீட்டுத் தரக் கோரி ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
 இந்த மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜர்படுத்தப்பட்ட அந்த சிறுமி, தனக்கு 17 வயது ஆவதாக தெரிவித்தார். அப்போது சிறுமியின் தாய், தனது மகளை அழைத்துச் சென்ற இளைஞருக்கு ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் நடந்துள்ளதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், வேறு ஒரு வழக்கு விசாரணைக்காக அங்கு ஆஜராகியிருந்த வழக்குரைஞர் சுதா ராமலிங்கத்திடம் இது குறித்து விவரித்தனர். சிறுமியை திருமணம் செய்த இளைஞர் "போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த சிறுமியின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. "போக்சோ' சட்டம் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாததே இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணமாகும். இன்றைய இளைய தலைமுறையினர் விவரம் தெரியாமல் இளம் வயதில் செய்யும் தவறுகளால் தங்களுடைய வாழ்க்கையையே இழந்து விடுகின்றனர். இதுதொடர்பாக விழிப்புணர்வு முகாம்களை ஏன் நடத்தக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
 அப்போது வழக்குரைஞர் சுதா ராமலிங்கம், தங்களது அமைப்பின் சார்பில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போக்சோ சட்டம் குறித்து போதுமான விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
 இதனையடுத்து நீதிபதிகள், போக்சோ சட்டம் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு சமூக சேவை அமைப்புகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முன்வர வேண்டும் என அறிவுறுத்தி விசாரணையை வரும் ஜூன் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com