விவசாயிகளின் போராட்டத்துக்கு தீர்வு கண்டது அதிமுக அரசு: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

ஐம்பது ஆண்டு கால விவசாயிகளின் போராட்டத்துக்கு தீர்வு கண்டது அதிமுக அரசு என்றார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
விவசாயிகளின் போராட்டத்துக்கு தீர்வு கண்டது அதிமுக அரசு: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

ஐம்பது ஆண்டு கால விவசாயிகளின் போராட்டத்துக்கு தீர்வு கண்டது அதிமுக அரசு என்றார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
 கரூர் மக்களவைத்தொகுதி அதிமுக வேட்பாளர் மு. தம்பிதுரைக்கு ஆதரவாக கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா, கிருஷ்ணராயபுரம், குளித்தலை பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்து அவர் மேலும் பேசியது:
 திமுகவை குடும்பக் கட்சி என விமர்சித்துவிட்டு வெளியே வந்த வைகோ போன்ற சந்தர்ப்பவாதிகள்தான் அந்தக் கூட்டணியில் இருக்கிறார்கள். தகுதியான பிரதமர் இருந்தால்தான் தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களைப் பெற முடியும். கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளுக்கு தமிழகத்தில் ஒரு கொள்கை, கேரளத்தில் ஒரு கொள்கை.
 காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட முடியாமல் திமுகவால் 10 ஆண்டுகளாக நமக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. 23 நாட்கள் மக்களவையை நடைபெறாமல் செய்து காவிரிக்காகக் குரல் கொடுத்து, 50 ஆண்டுகால விவசாயிகளின் போராட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் மூலம் தீர்வு கண்டது அதிமுக அரசு. ஆனால் ராகுல் காந்தி கர்நாடகத்தில் பேசுகையில், "நான் பிரதமர் ஆனதும் காவிரியில் மேக்கேதாட்டுவில் அணை கட்டப்படும்; காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும்' என்கிறார். அப்படிப்பட்டவரைத்தான் ஸ்டாலின் பிரதமராகப் பார்க்கிறார்.
 தமிழகத்துக்கு துரோகம் விளைவிக்கும் இவர்களுக்கு தேர்தல் மூலம் பாடம் புகட்ட வேண்டும். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு எதிராக ராகுல் கூறியுள்ள கருத்து தமிழர்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சுவதுபோல இருக்கிறது. இதற்கு ஸ்டாலின் என்ன பதில் கூறப் போகிறார்?
 ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு இந்த இயக்கத்திலேயே நல்ல மரியாதையோடு இருந்த அந்த மனிதர் திமுகவில் அரவக்குறிச்சி வேட்பாளர். இன்றைக்கு திமுக சின்னத்தில் இருக்கும் அவர், அடுத்த தேர்தலில் எந்தச் சின்னத்தில் இருப்பார் எனத் தெரியவில்லை. அவருக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.
 இன்றைக்கு அசுர பலத்தோடு அதிமுக கரூரில் இருக்கிறது. இஸ்லாமியர்களின் மனதை மாற்ற சிலர் தில்லுமுல்லு செய்கிறார்கள். நாடாளுமன்றத்தில் முத்தலாக் சட்டம் நிறைவேற்ற எதிர்ப்புத் தெரிவித்தது அதிமுக உறுப்பினர்கள்தான்.
 இந்தியாவிலேயே சட்டம், ஒழுங்கு சீராக இருப்பது தமிழகத்தில்தான்.
 ஸ்டாலின் வேண்டுமென்றே எங்கள் ஆட்சியில் பாலியல் தொல்லை அதிகளவில் நடப்பதாகக் கூறுகிறார்.
 திமுக ஆட்சியை விட 6,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து தடையில்லா மின்சாரம் வழங்கிக் கொண்டிருப்பதால் ஜனவரியில் நடந்த தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் 3 லட்சத்து 437 கோடியில் தொழில் தொடங்க தொழில்முனைவோர் முன்வந்துள்ளார்கள். இதன்மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க உள்ளோம்.
 கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம். இங்கே மருத்துவக் கல்லூரி ரூ. 294 கோடியில் கட்டி தொடங்கப்பட உள்ளது. பசுபதிபாளையம், குளத்துப்பாளையம் பகுதியில் ரூ.13 கோடியில் குகைவழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கரூர் நகராட்சி முழுவதும் ரூ. 69 கோடியில் காவிரிக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ரூ. 22 கோடியில் சேலம் இணைப்புச்சாலை அமைக்கப்பட உள்ளது. புஞ்சைப்புகழூரில் ரூ. 490 கோடியில் கதவணை கட்டப்படும். புஞ்சைப்புகழூர் தனி தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது.
 கரூரை சுற்றி ரூ. 77 கோடியில் சுற்றுவட்டச் சாலையும் அமைக்கப்பட உள்ளது. கரூர் - சேலம், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுக்க மேம்பாலம் அமைக்கப்படும். வேட்பாளர் மு. தம்பிதுரை நாடாளுமன்றத்தில் நன்றாகப் பேசக் கூடியவர். இவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார் அவர்.
 போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com