Enable Javscript for better performance
இந்தத் தேர்தலுக்குப் பிறகு தான் எனது அரசியல் வாழ்க்கையே தொடங்க உள்ளது: முதல்வரின் சூசகப் பேச்சு- Dinamani

சுடச்சுட

  

  இந்தத் தேர்தலுக்குப் பிறகு தான் எனது அரசியல் வாழ்க்கையே தொடங்க உள்ளது: முதல்வரின் சூசகப் பேச்சு

  By DIN  |   Published on : 15th April 2019 02:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Stalin_Palaniswami

   

  இந்தத் தேர்தலுக்குப் பிறகு தான் எனது அரசியல் வாழ்க்கையே தொடங்க உள்ளது. மு.க.ஸ்டாலினின் கனவு கானல் நீராகிவிடும். அவரது முதல்வர் நாற்காலி கனவு எப்போதும் நிறைவேறாது என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

  சேலம் கோட்டை மைதானத்தில் அ.தி.மு.க. சார்பில் பிரசாரப் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இதில், சேலம் மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியது:

  மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக மெகா கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது.  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன எனக் கேள்வி எழுப்பிப் பேசி வருகிறார். 

  சேலம் நகரில் நெரிசலைக் குறைக்கக் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்களே இதற்கு சாட்சியாக உள்ளன.

  மேச்சேரி-நங்கவள்ளி குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கி வருகிறோம்.

  சேலம் நகரில் ரூ. 900 கோடி நிதி ஒதுக்கி சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தில் பணிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் 2 ஆண்டுகளில் சேலம் மாநகரம் மிகவும் நவீனமயமான நகராக மாற இருக்கிறது.

  திமுக ஆட்சியில் பாதியில் விட்டுச் சென்ற புதைச் சாக்கடை திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.  ஓமலூர்-மேச்சேரி, பவானி முதல் மேச்சேரி வழியாக தொப்பூர் வரை நான்கு வழி சாலையாக்கப்பட உள்ளது.

  சேலத்தில் விமான நிலையத்தில் உள்ளதைப் போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்ட மிக பிரம்மாண்ட பஸ் போர்ட் எனப்படும் பேருந்து முனையம் கொண்டு வரப்பட உள்ளது. 

  சேலம் இரும்பாலைப் பகுதியில் ராணுவ உதிரிபாக உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு,  பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.  மேட்டூர் உபரி நீர்த் திட்டத்தைச் செயல்படுத்தி ஏரி,  குளங்களில் தண்ணீரை நிரப்பி குடிநீர், பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

  சர்வதேச தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் சுமார் ரூ. 3 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டு,  304 தொழிற்சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  இதன் மூலம் நேரடியாக 5.5 லட்சம் பேருக்கும்,  மறைமுகமாக 5.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

  பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.1,000 வழங்கப்பட்டது.  அடுத்து ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் திட்டம்,  திமுக நீதிமன்றம் சென்ற காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  தேர்தலுக்குப் பிறகு அந்தத் தொகை ஏழைகளுக்கு வழங்கப்படும்.

  காவிரி-கோதாவரி நதி நீர் இணைப்பு திட்டத்தின் மூலம் சேலத்தில் உள்ள வறட்சியான பகுதிகள் பாசனம் பெற்று பசுமையடையும்.  மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அளித்து சேவை செய்து வரும் தமிழக அரசை,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தரக்குறைவாகப் பேசி வருகிறார். 

  மக்களவைத் தேர்தலுக்கு பிறகு எனது அரசியல் வாழ்க்கை முடியும் என பேசி வருகிறார்.  இந்தத் தேர்தலுக்குப் பிறகு தான் எனது அரசியல் வாழ்க்கையே  தொடங்க உள்ளது. மு.க.ஸ்டாலினின் கனவு கானல் நீராகிவிடும். அவரது முதல்வர் நாற்காலி கனவு எப்போதும் நிறைவேறாது.

  நீங்கள் போட்ட எல்லா திட்டங்களையும் தவிடுபொடியாக்கி விட்டோம். ஆட்சியைக் கவிழ்க்க  செய்த சதியை முறியடித்து விட்டோம். மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும், இடைத்தேர்தலில் முதற்கட்டமாக 18 தொகுதிகளிலும், அதற்கடுத்து நடைபெற உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அதிமுக கூட்டணி நூறு சதவீத வெற்றி பெறும் என்றார்.

  இந்த தேர்தலுக்குப் பிறகுதான் எனது அரசியல் வாழ்க்கையே தொடங்க உள்ளது என்று பழனிசாமி பேசியிருப்பதன் அர்த்தம், ஆட்சிக்கு தலைமை ஏற்று, தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு மக்களவை மற்றும் இடைத் தேர்தலை சந்திப்பதால், இதன் வெற்றி தோல்வி முழுமைக்கும் தானே பொறுப்பு. இதன் மூலம் அதிமுக அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்று தனது முழுமையான அரசியல் வாழ்க்கை தேர்தலுக்குப் பிறகுதான் ஆரம்பிக்கப் போகிறது என்று மறைமுகமாகக் கூறியிருக்கிறாரா? அல்லது வேறு ஏதேனும் மறைமுகப் பொருளை உணர்த்த முன்வருகிறாரா? 

  உங்களுக்கு ஏதேனும் புரிகிறதா?

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai