Enable Javscript for better performance
தேர்தல் நேர க(ô)ட்சிகள்! 2- Dinamani

சுடச்சுட

    
    leaders

    1977-இல் அவசரநிலை காலத்துக்குப் பிறகு நடந்தது ஆறாவது சட்டப்பேரவைக்கான தேர்தல். 1972-இல் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறிய எம்ஜிஆர், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பெயரில் கட்சியைத் தொடங்கி தேர்தல் களம் கண்டது 1977 தேர்தலில்தான். அதற்கு முன்பே திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலிலும் கோவையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் எம்ஜிஆர் மாபெரும் வெற்றி அடைந்திருந்தாலும், பொதுத் தேர்தலில் அஇஅதிமுக முதன்முறையாக பங்குபெற்றதும் வெற்றி பெற்றதும் 1977 தேர்தலில்தான். அன்று முதல் இன்றுவரை 1967-இல் ஆட்சியைப் பிடித்த திமுகவைப்போல, 1977-இல் வெற்றி பெற்ற அதிமுகவும் ஓர் அரசியல் சக்தியாக தமிழகத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

     1980 நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியைக் காரணம் காட்டி, எம்ஜிஆர் தலைமையிலான மாநில அரசு கலைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1980-இல் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் திமுகவும் இந்திரா காங்கிரஸும் அமைத்த கூட்டணியை எதிர்கொள்ள எம்ஜிஆரால் அமைக்கப்பட்டதுதான் 16 கட்சிக் கூட்டணி. எதிர்பார்த்தது போலவே அதிமுக தலைமையில் எம்ஜிஆரால் ஏற்படுத்தப்பட்ட கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியது.

     1980 சட்டப்பேரவைத் தேர்தலில் களம் கண்ட இரண்டு மாநிலக் கட்சிகள், ஜனதா கட்சியிலிருந்து பிரிந்த குமரி அனந்தனின் தலைமையிலான காந்தி - காமராஜ் தேசிய காங்கிரஸ், இந்திரா காங்கிரஸிலிருந்து வெளியேறிய பழ. நெடுமாறனால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ்.

     அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு இந்த இரண்டு கட்சிகளும் சில உறுப்பினர்களுடன் வெற்றி பெற்றன என்றாலும், தொடர்ந்து தாக்குப் பிடிக்கவில்லை. காந்தி - காமராஜ் தேசிய காங்கிரஸ் மீண்டும் காங்கிரஸில் இணைந்துவிட்டது. நெடுமாறனின் கட்சி அடுத்த தேர்தலில் போட்டியிட்டது என்றாலும் அதற்குப் பிறகு காணாமல் போய்விட்டது.

     1984-இல் நடந்த எட்டாவது சட்டப்பேரவைத் தேர்தலை ஓர் அனுதாப அலைத் தேர்தல் என்றுதான் சொல்ல வேண்டும். இந்திரா காந்தியின் படுகொலையும் அன்றைய எம்ஜிஆரின் உடல்நலக் குறைவும் பெரிய அளவில் அனுதாபத்தை ஏற்படுத்தியதால் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கும் இந்திரா காங்கிரஸுக்கும் சாதகமாக அமைந்ததில் வியப்பில்லை. அதனால் அந்தத் தேர்தலில் புதிய கட்சிகளுக்கு இடமில்லாமல் போனது.

     1989-இல் நடந்த ஒன்பதாவது சட்டப்பேரவைத் தேர்தல் சற்று வித்தியாசமானது. எம்ஜிஆரின் மறைவு, அதிமுகவில் பிளவு போன்ற அதிரடி அரசியல் மாற்றங்களின் பின்னணியில் நடந்த தேர்தல் அது. காங்கிரஸிலிருந்து வெளியேறிய சிவாஜி கணேசன் தலைமையிலான தமிழக முன்னேற்ற முன்னணி இந்தத் தேர்தலில் களமிறங்கியது.

     தமிழகம் முதன்முறையாக நான்கு முனைப் போட்டியைச் சந்தித்ததும் இந்தத் தேர்தலில்தான். திமுக, காங்கிரஸ் அல்லாமல் புறா சின்னத்தில் எம்ஜிஆரின் மனைவி வி.என். ஜானகி தலைமையிலான அதிமுக (ஜா)வும், சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா தலைமையிலான அதிமுக (ஜெ)வும் 1989 தேர்தலில் களமிறங்கின.
     தேர்தலில் படுதோல்வியைத் தழுவிய சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணி, ஜனதா கட்சியில் இணைந்தது. கட்சியில் ஏற்பட்ட பிளவால் வெற்றியைப் பறிகொடுத்த ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகள் தேர்தலுக்குப் பிறகு இணைந்து அதிமுக மீண்டும் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி செயல்பட்டு வருகிறது.
     கருணாநிதி தலைமையில் 1989-இல் அமைந்த திமுக ஆட்சி, விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கலைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் தாக்கப்பட்டு ஸ்ரீபெரும்புதூரில் அகால மரணமடைந்ததின் பின்னணியில் 1991-இல் நடைபெற்றது 10-ஆவது சட்டப்பேரவைக்கான தேர்தல். அது அனுதாப அலைத் தேர்தலாக அமைந்ததில் வியப்பில்லை. அந்தத் தேர்தலில்தான் மிகப் பெரிய அனுதாப அலைக்கு நடுவிலும் முதன்முதலாக பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. பண்ருட்டி தொகுதியில் வெற்றி பெற்ற பாமக, இன்று வரை வடமாவட்டங்களில் செல்வாக்குள்ள கட்சியாக வலம் வந்துகொண்டிருக்கிறது.

     1996-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் புதிய கட்சிகள் களம் கண்டன. காங்கிரஸில் ஏற்பட்ட பிளவால் ஜி.கே. மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானது. திமுகவில் இருந்து வெளியேறிய வைகோ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி தேர்தலைச் சந்தித்தது.

     திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்ததால், ஜி.கே. மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கணிசமான இடங்களில் வெற்றி பெற முடிந்தது. ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் காங்கிரஸில் இணைந்துவிட்டது.

     மதிமுக ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மூன்றே மூன்று இடங்கள் தவிர, மற்ற இடங்களில் டெபாஸிட்கூட அந்தக் கட்சிக்குக் கிடைக்கவில்லை. அந்தக்கட்சி சந்தித்த முதல் தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தாலும் அரசியலில் தாக்குப்பிடிக்கும் கட்சியாக மதிமுக இன்றுவரை தொடர்கிறது என்பதை மறுக்க முடியாது.

     2001-ஆம் ஆண்டு நடந்த 11-ஆவது சட்டப்பேரவைத் தேர்தலின் குறிப்பிடத்தக்க அம்சம் ஜாதிக் கட்சிகளின் படையெடுப்பு. தொல். திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் போன்ற தலித் அமைப்புகள் களம் கண்ட தேர்தல் அது. ஏ.சி. சண்முகம் தலைமையில் புதிய நீதிக் கட்சி என்ற அமைப்பும் தேர்தல் களத்தில் குதித்தது.

     2006 சட்டப்பேரவைத் தேர்தலில் பரபரப்பாக பேசப்பட்ட புதிய கட்சி, விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம். அந்தத் தேர்தலில் பெரிய அளவில் பிரசாரத்தின்போது பொதுமக்களைக் கவர்ந்த கட்சியும் இதுதான். திண்டிவனம் ராமமூர்த்தி தலைமையிலான தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் கட்சி தனித்து அந்தத் தேர்தலில் போட்டியிட்டது. ஆர்.எம். வீரப்பன் - ஜெகத்ரட்சகன் தலைமையிலான ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்று சில கட்சிகள் களமிறங்கின என்றாலும்கூட, அவை அரசியலில் ஒரு சக்தியாகத் தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியவில்லை.

     2011 தேர்தலில் களம் கண்ட புதிய கட்சிகள், இந்திய ஜனநாயகக் கட்சி, முஸ்லிம் முன்னேற்றக் கழகம், கொங்குநாடு முன்னேற்றக் கழகம் ஆகியவை. மனிதநேய மக்கள் கட்சி முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டது 2011-இல்தான். 2006 தேர்தலின்போதே உருவாகியிருந்தாலும், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சந்தித்த முதல் தேர்தல் 2011. இவை மட்டுமல்லாமல், நடிகர் சரத் குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டதும் அந்தத் தேர்தலில்தான்.

     2016 சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய கட்சி என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியான கட்சிகள் எதுவும் இல்லையென்றாலும், நடிகர் சீமானின் நாம் தமிழர் கட்சியும், அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சியும் அந்தத் தேர்தலில் பங்கெடுத்த புதிய வரவுகள். அந்த இரண்டு கட்சிகளுமே மிகப்பெரிய அரசியல் சக்திகளாக உருவாகவில்லை என்றாலும், அரசியல் களத்தில் தொடர்ந்து செயல்படும் கட்சிகளாக இன்னமும் தொடர்கின்றன.

     2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகம் இரண்டு புதிய அரசியல் கட்சிகளை எதிர்கொள்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து டிடிவி தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) கட்சியும், நடிகர் கமல்ஹாசனால் தொடங்கப்பட்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியும் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

     இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்துத்தான் இவை தொடருமா? இல்லை கனவாகப் போகுமா என்பது தெரியவரும். தமிழ்நாட்டின் தேர்தல் சரித்திரத்தில் வந்துபோன கட்சிகள் பல. ஒருசில கட்சிகள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அதன் பிறகு காணாமல் போனதுண்டு. ஒன்றிரண்டு தேர்தலை மட்டுமே சந்தித்த கட்சிகளும் உண்டு. தேர்தலையே சந்திக்காமல் காணாமல் போன கட்சிகளின் பட்டியலும் இருக்கிறது.

     எஸ்.டி. சோமசுந்தரத்தின் "நமது கழகம்', எஸ். திருநாவுக்கரசரின் "எம்ஜிஆர் அண்ணா திமுக', நெடுஞ்செழியன் - கா. ராசாராம் போன்ற மூத்த தலைவர்கள் தொடங்கிய "மக்கள் திமுக' என தலைவர்களை நம்பித் தொடங்கப்பட்டு நாளடைவில் காணாமல் போன கட்சிகள் எத்தனையோ இருக்கின்றன. நடிகர்கள் எஸ்.எஸ். ராஜேந்திரன், டி. ராஜேந்தர், கே. பாக்யராஜ் ஆகியோரும் தங்கள் பங்குக்கு ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கியதையும் மறந்துவிட முடியாது. தேர்தலுக்குத் தேர்தல் புதுப்புது கட்சிகள் தோன்றுவதும், தேர்தல் முடிந்தவுடன் தோல்வியால் துவண்டுபோய் காணாமல் போவதும், அரசியல் சித்து விளையாட்டின் பகுதி. இந்த விளையாட்டு, ஜனநாயகம் இருக்கும் வரை தொடர்ந்தவண்ணம் இருக்கும்.
     
     
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai